Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

19ஆம் தேதி மக்களவை முதல்கட்ட தேர்தல்: 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் போட்டி

PRITHIVIRAJ17-04-2024
19ஆம் தேதி மக்களவை முதல்கட்ட தேர்தல்: 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் போட்டி

வரும் 19ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடக்கிறது. இதில் 8 மத்திய அமைச்சர்கள், இரு முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் ஒருவர் களத்தில் உள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது, ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

வரும் 19ம் தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவில் தமிழகமும் அடங்கும்.

voting Machine.jpg

இந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றிக்கா, நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2014ம் ஆண்டில் 7 முறை எம்.பியாக இருந்த விலாஸ் முட்டெம்வரை 2.84 லட்சம் வாக்குகளில் நிதின் கட்கரி தோற்கடித்து, 2019லும் காங்கிரஸ் தலைவர் நானா படோலை 2.16 லட்சம் வாக்குகளில் வென்றார்.

2வதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அருணாச்சலப்பிரதேசம் மேற்குத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். 52வயதான கிரண் ரிஜிஜூ 2004ம் ஆண்டிலிருந்து இந்தத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். இந்த முறை ரிஜிஜூவுக்கு கடும்போட்டியாளராக அருணாச்சலப்பிரதேச காங்கிரஸ் தலைவர் நபம் துகி உருவெடுத்துள்ளார்.

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் அசாமின் திப்ருகார் தொகுதியில் போட்டியிடுகிறார். பெட்ரோலியத்துறை இணைஅமைச்சராகஇருந்த ராமேஸ்வர் தெலிக்கு சீட் மறுக்கப்பட்டு திப்ருகார் தொகுதியில் கிரண் ரிஜூஜுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் தொகுதி சாதிய அரசியலுக்கு பெயர் பெற்றது. இந்தத் தொகுதியில் வேட்பாளரின் வெற்றி, தோல்வி சாதியத்தின் அடையாளத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

voting-660_111816115211.avif

இந்த முறை இந்தத் தொகுதியில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பலியான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர் ஹரிந்திர மாலிக், பிஎஸ்பி வேட்பாளர் தாரா சிங் பிரஜாபதி போட்டியிடுகிறார்கள். இந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஜூனியர் அமைச்சராக இருந்த ஜிதேந்திர சிங் உத்தம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், ராஜஸ்தானின் ஆல்வார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லலித் யாதவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

மத்திய சட்டத்துறைஅமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ராஜஸ்தானின் பிகானிர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோவிந்த் ராம் மேக்வாலை எதிர்த்து களம் காண்கிறார்.

தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் திமுக எம்.பி. அ.ராசாவை எதிர்த்து மத்திய இணைஅமைச்சர் எல் முருகன், பாஜக சார்பில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சராக இருக்கும் எல் முருகன் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். நீலிகரி தொகுதியில் இரு முறை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அ.ராசாவுக்கும், எல் முருகனுக்கும் கடும் போட்டியிருக்கும்.

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் மற்றும் அதிமுக சார்பில் சேவியர் தாஸ் போட்டியிடுகிறார்கள். தமிழகத்தில் கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளராக கணபதி பி.ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியின் முடிவு அனைவராலும் பரவலாக எதிர்நோக்கப்படுகிறது.

voting machine.jpg

தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கெனவே கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதியல் போட்டியிட்டு தமிழிசை தோல்வி அடைந்தார்.

இந்த முறை தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலனும், அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணியும் போட்டியிடுகிறார்கள்.

திரிபுராவில் இரு மக்களவைத் தொகுதியில் திரிபுரா மேற்குத் தொகுதியில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் முன்னாள் முதல்வர் பிப்லவ்குமார், மாநில காங்கிரஸ் தலைவர் ஆஷிஸ் குமார் சாஹாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அசாமில் கலியாபோர் தொகுதியில் இருமுறை வெற்றி பெற்ற கவுரவ் கோகாய் ஜோர்கட் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் தபோன் குமார் கோகய் போட்டியிடுகிறார்.

மணிப்பூர் சட்டம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் பசாந்தா குமார் சிங் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிமால் அகோய்ஜம் போட்டியிடுகிறார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்