Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதிமாறன் அவதூறு வழக்கு

LENIN DEVARAJAN18-04-2024
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதிமாறன் அவதூறு வழக்கு

தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எதிராக அவர் மீது தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார். நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை தமிழ்நாடு மற்றும் புதுவை என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரைகள் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. வாக்கு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் போலீசார், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று அவரது ’எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டார். அதில்.,”ஒரு மக்களவை உறுப்பினரின் அடிப்படைக் கடமையான MPLADS நிதியைக் கூட சரிவரக் கேட்டு பெறமுடியாமல், வெறும் 25 சதவீதம் மட்டுமே செலவிட்டு, 75 சதவீத ஒதுக்கீட்டை வீணடித்த திமுக கூட்டணி எம்பிக்களுக்கு மீண்டும் வாக்களித்து என்ன பயன்?” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு வெறும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், திமுக மத்திய சென்னை சிட்டிங் எம்.பி.யும், வேட்பாளருமான தயாநிதி மாறன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ”எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்”, என மனுவில் தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்