Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

தேர்தல் விளம்பர வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

SAMYUKTHA17-04-2024
தேர்தல் விளம்பர வழக்கு:  தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் என்று தீர்ப்பு நகலை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த தலைமைத் தேர்தல் அதிகாரியின் உத்தரவை எதிர்த்தும், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிகளை எதிர்த்தும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற விதிகள் முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என்று விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், தேர்தல் விளம்பரங்களை முறைப்படுத்த எந்த விதிகளும் இல்லை. தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று 2004ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நீடிக்கிறது என்று கூற முடியாது. அதன்பின் 2023ம் ஆண்டு ஆகஸ்ட்டில் விதிகள் வகுக்கப்பட்டன. அதில் மேல் முறையீடு செய்வதற்கு எந்த வழிவகையும் செய்யவில்லை என்று வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, கேபிள் டிவி ஒழுங்குமுறை விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்று உத்தரவிட்டுள்ளது. வேறு எந்த நீதிமன்றமும், தீர்ப்பாயமும் எந்த வழக்கையும் விசாரிக்க முடியாது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த உத்தரவு 2004ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்தது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நகல் எங்கே எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு நகல் இல்லை எனவும், உச்ச நீதிமன்ற இணைய தளத்திலும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நகலை நாளை (இன்று) தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்