Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

முந்தைய 9 ஆண்டுகளை விட பாஜ ஆட்சியில் ஈடி சோதனை பல மடங்கு அதிகரித்துள்ளது - புள்ளி விவரங்கள் வெளியீடு

SAMYUKTHA17-04-2024
முந்தைய 9 ஆண்டுகளை விட பாஜ ஆட்சியில் ஈடி சோதனை பல மடங்கு அதிகரித்துள்ளது - புள்ளி விவரங்கள் வெளியீடு

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் 9 ஆண்டுகளை விட பாஜவின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் அமலாக்கத்துறை சோதனை, விசாரணைகள் பல மடங்கு அதிகரித்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.

வரி ஏய்ப்பு, கருப்பு பணம் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் போன்ற கடுமையான குற்றங்களை தடுக்க கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ) அமல்படுத்தப்பட்டது. ஆளும் பாஜ அரசு இந்த சட்டத்தை பயன்படுத்தி அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரசின் ஐமு கூட்டணி அரசின் 2005 ஜூலை முதல் 2014 மார்ச் வரையிலும், பாஜ அரசின் 2014 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலுமான அமலாக்கத்துறையின் செயல்பாடு குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

  • கடந்த 10 ஆண்டுகளில் 5,155 பிஎம்எல்ஏ வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இதற்கு முந்தைய காலகட்டத்தில் (2005-2014) 1,797 புகார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. அதாவது பாஜ ஆட்சியில் வழக்கு பதிவு 3 மடங்கு அதிகரித்துள்ளது.

  • இந்த சட்டத்தின் கீழ் 2014ம் நிதியாண்டில் முதல் தண்டனையை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 63 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

  • 2014-2024 காலகட்டத்தில் நாடு முழுவதும் 7,264 ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இது முந்தைய காலகட்டத்தை விட 86 மடங்கு அதிகம். காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 84 சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

  • கடந்த 10 ஆண்டுகளில் 755 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.1,21,618 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவே முந்தைய 9 ஆண்டில், 29 கைதுகள் மற்றும் ரூ.5,086.43 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 மடங்கும், சொத்துக்கள் பறிமுதல் 24 மடங்கும் அதிகரித்துள்ளது.

  • கடந்த பத்தாண்டுகளில் 1,971 அசையா மற்றும் அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. முந்தைய காலகட்டத்தில் 311 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

  • கடந்த 10 ஆண்டில், குற்றப்பத்திரிகை தாக்கல் 12 மடங்கு அதிகரித்து, 1,281 ஆக உள்ளது. முந்தைய 9 ஆண்டில் 102 குற்றப்பத்திரிகை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • பல்வேறு நீதிமன்றங்கள் மூலம் 36 வழக்குகளில் 63 பேர் மீது வழக்குத் தொடர ED 36 வழக்குகளில் தண்டனை உத்தரவுகளைப் பெற்றுள்ளதாகவும், கடந்த பத்தாண்டுகளில் மொத்தம் 73 குற்றப்பத்திரிகைகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

  • கடந்த பத்து ஆண்டுகளில் ரூ. 2,310 கோடி மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. இது முந்தைய காலகட்டத்தில் இது ரூ. 43 லட்சமாக இருந்தது.

  • கடந்த 10 ஆண்டுகளில் 43 நாடு கடத்தல் கோரிக்கை மற்றும் 24 இன்டர்போல் நோட்டீஸ்களை அமலாக்கத்துறை விடுத்துள்ளது. இதற்கு முன் இது போன்ற எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  • கடந்த 10 ஆண்டில் 4 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதே நேரத்தில் தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் சஞ்சய் பண்டாரி போன்றவர்களை இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்