



முக்கிய செய்தி:
தலையங்கம்
ஊடக உலகில் கால் பதிக்கும் “சவுக்கு மீடியா”

அன்பார்ந்த வாசகர்களே, நேயர்களே, நண்பர்களே,
சவுக்கு மீடியா இன்றுமுதல் தன் பயணத்தை தொடங்குகிறது. ஏன் இந்த பயணம் ?
ஊடக பயணம் அச்சு ஊடக காலத்திலிருந்து தொடங்குகிறது. ‘இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்’ என்கிற காலக்கட்டத்தில் மனித உரிமை ஆணையம் போன்ற எதுவும் இல்லாத சூழல். அந்த காலகட்டத்திலேயே, பாரதியார் போன்ற வீரஞ்செறிந்த மனிதர் எளிய மக்களுக்காக பேசினார். எழுதினார். அதனால் அவர் அடைந்த துன்பங்கள், சிறைவாசம் எண்ணிலடங்காதது. அதன் பின்னர் பல ஜாம்பவான்கள் உருவாகி ஆளும் அரசை தங்கள் பேனா வலிமையால் நெறிப்படுத்தியுள்ளனர்.
அப்படிப்பட்ட நிலைமை எதுவும் இல்லாத காலக்கட்டத்தில் இன்று ஊடகத்தினர் பயணிக்கின்றனர். ஆனால் அன்று இருந்த அந்த நெஞ்சுரம் இருக்கிறதா? என்றால் இல்லை என்று தயங்காமல் சொல்லலாம். வாழ்வின் தேவைகள் அதை மூடுபனிபோல் மூடியுள்ளது. அறிவியல் வளர்ச்சி நம்மை, நாம் வாழும் சூழலை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. அவ்வளர்ச்சியை பயன்படுத்தி ஊடகங்கள் தங்களை செம்மைப்படுத்தியிருக்க வேண்டும், செழுமைப்படுத்தி மக்களுக்கு மேலும் சேவை செய்திருக்க வேண்டும். ஆனால் நம் விரல் நுனியில் தகவலை கொண்டு வந்து சேர்க்கும் இந்த காலத்தில் மக்கள் பிரச்சினைகளை ஊடகங்கள் பேச மறுப்பதை பார்க்கிறோம்.
அச்சு ஊடகங்களுக்கு அடுத்த கட்டமாக காட்சி ஊடகம் அசுர வளர்ச்சி அடைந்தது. சந்தைப் பொருளாதாரத்துக்கு பின், உலகமயமாக்கலுக்குப் பின், வணிகம் முன்வந்து ஊடகம் பின்சென்றதை பார்த்தோம். வணிகம் மக்களுக்கான உண்மை எது என்பதை தீர்மானித்தது. ஆனால் மக்கள் அறிவாளிகள். இயற்கையும் இந்த சமனற்ற நிலையை வேடிக்கை பார்க்காது.
உருவானது சமூக ஊடகங்கள். மக்களில் ஒவ்வொருவரும் செய்தியாளரானார்கள். வெகுஜன ஊடகங்களும் ஊடகவியாளர்களும் அம்பலப்பட்டனர். சில விதிவிலக்குகளை தவிர எல்லா ஊடகங்களையும் மக்கள் சமூக வலைத்தளங்களில் எள்ளி நகையாடி வருகிறார்கள். அவர்களின் போலித்தனங்கள் அம்பலப்பட்டுப் போயின.
மக்களே ஊடகவியலாளர்கள் ஆனார்கள். அவர்களில் இருந்து உருவாகும் ஊடகங்களுக்கு அவர்கள் ஆதரவு அளித்தார்கள். அதிலும் போலிகளை விலக்கினார்கள். போலிகள் அவர்களாகவே அம்பலப்பட்டனர்.
வெறும் சமூக ஊடக இயக்கமாக இருந்து பத்தாண்டுகள் செயல்பட்டபின், அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அரசுப் பணியி லிருந்து நீக்கம் செய்து, அடுத்த கட்டத்துக்கு நீ சென்றுதான் ஆக வேண்டும் என்று உந்தினார்கள். மக்களும் அரவணைத்தார்கள்.
பிறகென்ன ? ஒத்த கருத்துடைய நண்பர்கள் இணைந்து, சமூகவலைத்தள ஊடகங்களுக்கு ஒரு வடிவம் கொடுப்போமா என்று ஆலோசித்தோம். வெகுஜன ஊடகங்கள் காலி செய்த இடத்தை நிரப்புவோம் என்று முடிவு செய்தோம். உலகெங்கும் இருந்து நண்பர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள். சொல்லப்போனால் உதவி நிரம்பி வழிகிறது.
உங்களின் ஆதரவோடு, உங்கள் ஊடகத்தை கட்டுவது என்று முடிவெடுத்து, செயல்படுத்தியதன் விளைவுதான் “சவுக்கு மீடியா”.
சிறிய அளவில் செய்தி வலைத்தளம் மற்றும் யுட்யூப் சேனல்கள் இரண்டை தொடங்கியுள்ளோம்.
சவுக்கு மீடியா யூடியூப் சேனல், அரசியல் பேசும், அவ்வப்போது நான் பேசுவேன். மக்கள் நலனில் முன் நிற்பேன். மக்கள் நலனுக்காக பேசுவேன். எழுதுவேன்.
சவுக்கு செய்தி வல ைத்தளம், செய்திகளை break செய்யும். முதலில் செய்திகளை வழங்கும். செய்திகளை உறுதி செய்தபின் வெளியிடுவோம். உண்மைத்தன்மையை உறுதி செய்வோம்.
பொழுதுபோக்குக்கு எஸ்-பிளக்ஸ் சானல். அதில் சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு மக்கள் நலன் சார்ந்த, மருத்துவம், உடல் நலன், சமையல், மொபைல் தொடங்கி மோட்டார் சைக்கிள் கார் வரை பல்வேறு விஷயங்கள் உண்டு.
சவுக்கு மீடியாவின் எடிட்டோரியல் கொள்கை என்ன ? மக்கள் நலன். விளிம்புநிலை மக்களின் நலன். ஒடுக்கப்பட்ட மக்களின் நலன். குரலற்றவர்களின் நலன். வெகுஜன மக்களின் நலன். இந்த நலனை அடைவதற்காகவே சவுக்கு மீடியா உருவாகியுள்ளது. இதை நோக்கிய பயணம்தான் சவுக்கு மீடியா.
உங்களுடன் பயணிக்க நாங்கள் தயார். நீங்களும் தயார் என்பதை அறிவோம். மக்கள் ஊடகம் பிறந்து விட்டது.
அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்போம். உண்மையான மக்களாட்சியை உருவாக்குவோம். ஐந ்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்ல. அனுதினமும் கேள்வி கேட்போம். நாம்தான் உண்மையான எஜமானர்கள் என்பதை நடைமுறைப்படுத்துவோம்.
அன்புடன்
சவுக்கு சங்கர் 01.09.2023
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
டிரெண்டிங்
மேலும் பார்க்க
செய்திமடலுக்கு சந்தாதராகவும்
உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்