Logo
Logo

முக்கிய செய்தி:

விளையாட்டு

19வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை: 4-வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன்! பைனலில் இந்தியாவை வென்றது

PRITHIVIRAJ11-02-2024
19வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை: 4-வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன்! பைனலில் இந்தியாவை வென்றது

19வயதுக்குட்பட்டோருக்கான 15-வது உலகக் கோப்பையை 4வது முறையாக வென்றது ஆஸ்திரேலிய அணி.

தென் ஆப்பிரிக்காவின் பினோனி நகரில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் சேர்த்தது. 254 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்து 79 ரன்களில் தோல்வி அடைந்தது.

aus2.jpg

9-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, 4-வது முறையாக கோப்பையை கோட்டைவிட்டது. இந்திய அணி ஏற்கெனவே 5 முறை உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தநிலையில் 6வது முறையாக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் மிஞ்சியது.

உலகக் கோப்பை லீக் சுற்று முதல் அரையிறுதிவரை ஒரு போட்டியில்கூட தோற்காமல், அதிலும் அரையிறுதிவரை முதலில் மட்டுமே பேட்டிங் செய்து பந்துவீச்சில் எதிரணியை சுருட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சேஸிங் செய்து வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனால், பைனலில் ஆஸ்திரேலியாவை வென்று கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் இந்திய அணி மீது ஆர்வமாக இருந்தனர். ஏனென்றால், ஏற்கெனவே 3 முறை பைனலில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியதால், வரலாறு சாதகம் என்று நம்பினர். ஆனால், அனைத்தும் இன்று ஏமாற்றத்தில் முடிந்தது.

aus.jpg

இந்திய அணியில் குல்கர்னி, சச்சன் தாஸ், பாண்டே ஆகியோரின் பேட்டிங் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது ஆனால், இவர்கள் அனைவருமேசொதப்பியது தோல்விக்கு முக்கியக் காரணமாகும். உலகக் கோப்பைதை தொடரில் வலிமையான அணியாக இந்தியா பார்க்கப்பட்டது.

இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகும். அதிலும் கேப்டன் வீப்கன், டிக்சன், ஆலிவர் பீக் ஆகியோர் சேர்த்த 40 ரன்கள் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியமானவை.

குறிப்பாக ஹர்ஜாஸ் சிங் இந்தத் தொடரில் முதல்முறையாக அரைசதத்தை அடித்து வெற்றிக்கு துணையாக அமைந்தார். இந்திய அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த வேகப்பந்துவீச்சாளர் விட்லர், பியர்ட்மேன், மெக்மிலன் ஆகியோரின் பந்துவீச்சு அற்புதம்.

aus3.jpg

ஆஸ்திரேலிய அணிக்கு பியர்ட்மேன், மெக்மிலன், விட்லர் நல்ல வரவாகும். ஆட்டநாயகன் விருது பந்துவீச்சாளர் பியர்ட்மேனுக்கு வழங்கப்பட்டது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. ஹேரி டிக்சன், கோன்ஸ்டாஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்திய வேகப்பந்துவீச்சாளர் லிம்பானி வீசிய 3வது ஓவரில் கோன்ஸ்டாஸ் க்ளீன் போல்டாகி வெளியேறினார். லிம்பானியின் அற்புதமான ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், லேசான லெக் கட்டர் ஸ்டெம்பை பதம் பார்க்கவே, கோன்ஸ்டாஸ் ஆட்டமிழந்தார்.

2வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹக் வீப்கன் களமிறங்கி, டிக்சனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இருவரையும் பிரிக்க இந்தியப் பந்துவீச்சாளர்கள் நீண்டநேரம் போராடியும் பயன் அளிக்கவில்லை.

2-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தநிலையில் இருவரும் பிரிந்தனர். கேப்டன் வீப்கன் 2 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 48 ரன்னில் திவாரி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் திவாரி பந்துவீச்சில் டிக்சன் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா சற்று தடுமாற்றத்துடன் விளையாடியது. ஆனால், இந்தத் தருணத்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ind1.jpg

நடுவரிசை பேட்ஸ்மேன்களை நங்கூரம் பாய்ச்ச வாய்ப்பளித்தது பெரிய ஸ்கோருக்கு வாய்ப்பானது. 4-வது விக்கெட்டுக்கு ஹர்ஜாஸ் சிங், விக்கெட் கீப்பர் ரியான் ஹிக்ஸ் இருவரும் சேர்ந்து ஸ்கோரை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்தனர். 4வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தநிலையில் ரியான் 20 ரன்னில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு வந்த ஆலிவர் பீக், ஹர்ஜாஸ் சிங்குடன் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்த்தார். ஹர்ஜாஸ் சிங் அரைசதம் அடித்து 55 ரன்னில் பாண்டே பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

அதன்பின் கடைசி வரிசையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஆலிவர் நிலையாக இருந்து ஸ்கோரை உயர்த்தினார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆலிவர்46 ரன்களும், ஸ்ட்ராக்கர் 8 ரன்களும் சேர்த்தனர்.

இந்தியத் தரப்பில் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், திவாரி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ind.jpg

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதுவரை 14 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 248 ரன்கள்தான் அதிகபட்சமாகும், அதை முறியடித்து 253 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்துள்ளது.

254 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பலமே அதன் வேகப்பந்துவீச்சாளர்கள்தான். எதிர்பார்த்தது போலவே வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தொடக்கத்தில் இருந்தே இந்திய பேட்டர்கள் திணறினர்.

குல்கர்னி, ஆதர்ஷ் சிங் ஆட்டத்தைத் தொடங்கினர். வீடர் வீசிய 3வது ஓவரில் குல்கர்னி 3 ரன்னில் விக்கெட் கீப்பர் ரியானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த முஷீர் கான், ஆதர்ஷ் சிங்குடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. 20 ரன்னில் முஷீர் கான் பியர்ட்மேன் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார்.

ind.jpg

அதன்பின் களமிறங்கிய இந்திய பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். கேப்டன் உதய் சஹரன்(8), மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தாஸ்(9), பிரியான்சு மோலியா(9), விக்கெட் கீப்பர் அவனிஷ் (0), என வரிசையாக வெளியேறினர்.

40 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 51 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. பொறுமையாக பேட் செய்த ஆதர்ஷ் சிங் அரைசதத்தை தவறவிட்டு 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய லிம்பானி டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். கடைசிநிலை வீரர் முருகன் அபிஷேக் அதிரடியாக ஆடி 42 ரன்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்திய அணி 168 ரன்களுக்கு 9விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் தத்தளித்தது. இந்திய அணி கோப்பையை நழுவவிட்டது ஏறக்குறைய உறுதியானது. பாண்டே, திவாரி இருவரும் கடைசி நேரத்தில் போராட்டம் செய்தனர்.

ind 3.jpg

42 பந்துகளில் இந்திய அணி வெற்றி பெற 81 ரன்கள் எனும் பெரிய இலக்கு இருந்தது. ஆனால் இந்திய அணியிடம் ஒருவிக்கெட் மட்டுமே இருப்பதால், தோல்வி என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ஸ்ட்ரேக்கர் வீசிய 44-வது ஓவரில் பாண்டே 2 ரன்னில் விக்கெட் கீப்பர் ரியானிடம் கேட்ச் கொடுக்கவே இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

43.5 ஓவர்களில் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 79 ரன்களில் தோல்விஅடைந்தது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்