Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

EVM VVPAT: இவிஎம் எந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபாட் சிலிப் கொண்டு சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

PRITHIVIRAJ26-04-2024
EVM VVPAT: இவிஎம் எந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபாட் சிலிப் கொண்டு சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரத்தில் வரும் சீட்டுகளை வைத்து சரிபார்க்க வேண்டும் எனக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அது மட்டுமல்லாமல் காகித முறையிலான வாக்குச்சீட்டுகளை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை நூறு சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் அகர்வால் என்பவர் உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

1974107-voterlist.webp

தேர்தல் ஆணையத்திற்கு 5 முக்கிய கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். அதற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதிகாரிகள், வல்லுநர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் ஆகியவை குறித்த எங்களது சந்தேகங்களுக்கு போதிய விளக்கம் கிடைத்து விட்டதாக தெரிவித்த நீதிபதிகள் தீர்ப்பை நேற்று முன்தினம் ஒத்திவைத்தனர். இதையடுத்து இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் “ நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டல்களை நீதிபதிகள் வழங்கினர்.

தேர்தல் முடிந்தபின் 45 நாட்கள் வரை வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்களை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும், சின்னங்களை பதிவேற்றம் செய்யும் யூனிட்கள் சீல் வைக்கப்பட்டு கன்டெய்னரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

1lj4blt8_evm-and-vvpat_625x300_12_March_19.webp

இவிஎம் எந்திரத்துடன் சேர்த்து சின்னங்களை பதிவேற்றம் செய்யும் எந்திரத்தையும் சேர்த்து சீல் வைத்து 45 நாட்கள்வரை பாதுகாப்பாக வைக்க வேண்டும். சீல் வைக்கும்போது, வேட்பாளர்கள் மற்றும் பரிதிநிதிகளின் கையொப்பமிட வேண்டும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், இவிஎம் எந்திரம் தயாரித்த நிறுவனத்தில் இருந்து வரும் பொறியாளர்கள் குழு, தலா ஒரு சட்டப்பேரவை மற்றும் தலா ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 5 சதவீதம் இவிஎம், கன்ட்ரோல் யூனிட், வாக்கு எந்திரம், விவிபேட் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

வேட்பாளர்களில் 2 அல்லது 3 பேர் எழுத்துப்பூர்வமாக விண்ணிப்பித்தால் இந்த பரிசோதனை தேர்தல் முடிவுகள் வந்த 7 நாட்களுக்குள் நடத்தப்படும். பொறியாளர்கள் குழுவினர் பரிசோதனைக்கு வந்து செல்லும் செலவு, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை வேட்பாளர்கள் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்கு எந்திரம் சேதப்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டால் அந்த பணம் வேட்பாளருக்கு திருப்பி வழங்கப்படும்.

அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களுடன் விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மற்றும் பார்கோடுகளை எண்ணும் மின்னணு இயந்திரத்தையும் சேர்க்க வேண்டும். அதேநேரம், மனுதாரர்கள் கோரிய, வாக்காளர்கள் ஒப்புகை சீட்டுகளை தாங்கள் சரிபார்த்து வாக்குப்பெட்டிக்குள் செலுத்தும் கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

evm1-bccl.jpg

நடுநிலையான கண்ணோட்டம் என்பது முக்கியமானது. ஒரு செயல்முறையை கண்ணை மூடிக்கொண்டு சந்தேகிக்கக் கூடாது. அதேநேரம், அர்த்தமுள்ள விமர்சனமும் அவசியம். ஜனநாயகம் என்பது அனைத்து தூண்களுக்கும் இடையே நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் பேணுவதாகும். நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலம், நமது ஜனநாயகத்தின் குரலை வலுப்படுத்த முடியும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்