Logo
Logo

முக்கிய செய்தி:

விளையாட்டு

ஜெய்ஷ்வால் எனும் புயல்..பானிபூரி விற்ற சிறுவன்...பார்போற்றும் கிரிக்கெட் வீரரான கதை

PRITHIVIRAJ03-02-2024
ஜெய்ஷ்வால் எனும் புயல்..பானிபூரி விற்ற    சிறுவன்...பார்போற்றும் கிரிக்கெட் வீரரான கதை

வறுமையும், காலமும் மனிதர்களை பல நேரங்களில் பட்டைத் தீட்டி வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துவிடும்.

அந்த காலக்கட்டத்தில் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் சாதனையாளர்களாக, வாழ்வில் முன்னேற்ற நிலைக்குச் செல்கிறார்கள். அதிலும் கனவை நிறைவேற்ற எந்தவிதமான வறுமையையும், ஏழ்மையும் தாங்கிக்கொண்டு சாதித்தவர்கள் சிலர்தான்.

வறுமையும், ஏழ்மையும் இலக்கை அடைவதற்கு தடைக்கற்கள் அல்ல, கடின உழைப்பும், முயற்சியும் எப்போதும் வீண்போகாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.

மாட்டுக் கொட்டகையில் தூங்கி எழுந்து, ஒருவேளை சாப்பாட்டுக்கும், செலவுக்கும், பயிற்சிக்கும் பானிபூரி விற்று மும்பையில் வாழ்க்கையை நடத்தி, தனது கனவை எட்டி, இன்று சாதனையாளராக மாறி, உலகை தன்பக்கம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

jaiswal.jpg

சாதனை இரட்டை சதம்

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டணித்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இடதுகை தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து 209 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதில் 7சிக்ஸர்கள், 19 பவுண்டரிகள் அடங்கும். 151 பந்துகளில் சதத்தை நிறைவு செய்த ஜெய்ஸ்வால், 277 பந்துகளில் இரட்டை சதத்தை அடைந்தார்.

இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தவிர எந்த வீரரும் அரைசதம்கூட அடிக்கவில்லை கேப்டன் ரோஹித் சர்மா, கில், ஸ்ரேயாஸ் அய்யர், பட்டிதர், அக்ஸர் படேல், பரத் ஆகிய வீரர்கள் 30 ரன்கள் சராசரியைக் கூட எட்டவில்லை. ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தார்போல் 2வது அதிகபட்ச ஸ்கோர் என்பது கில் சேர்த்த 34 ரன்கள்தான். மற்ற எந்த பேட்டர்களும் பெரிய ஸ்கோருக்கு முயற்சிக்கவில்லை.

ஜெய்ஸ்வாலும் சாதனைகளும்

இந்திய அணி வீரர் ஜெய்ஸ்வால் தனது அறிமுக டெஸ்ட் போட்டியான மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 171 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். அதன்பின் இப்போது இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஜெய்ஸ்வால் தனது 22 வயது 77 நாட்களில் இரட்டை சதம் அடித்து இளம் வயதில் இரட்டை சதம் அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

jai1.jpg

இதற்கு முன் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தனது 21வயது 32 நாட்களில் மும்பை வான்ஹடே மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். 2வதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது 21வயது 277 நாட்களில் இரட்டை சதம் அடித்தார். 3வதாக ஜெய்ஸ்வால் தனது 22வயது 77 நாட்களில்இந்த சாதனை படைத்துள்ளார்.

ஆனால், உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த பேட்டர் என்ற வகையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் தனது 19வயது 140 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதேபோல இரட்டை சதம் அடித்த 4வது இந்திய இடதுகை பேட்டர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இதற்கு முன் செளரவ் கங்குலி, வினோத் காம்ப்ளி, கெளதம் கம்பீர் ஆகியோர் இரட்டை சதம் அடித்தநிலையில் தற்போது ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார்.

யார் இந்த ஜெய்ஸ்வால்

உத்தரப்பிரதேச மாநிலம், பதோஹி நகர் அருகே சூர்யவான் எனும் கிராமத்தில் 2001ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி பிறந்தவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். கிரிக்கெட் குறித்த எந்த பின்புலமும் இல்லாத, சாதாரண வறுமை சூழ்ந்த குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்ஸ்வால்.

ஜெய்ஸ்வால் தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால் 6 குழந்தைகள், இதில் 4வதாக ஜெய்ஸ்வால் பிறந்தார். ஜெய்ஸ்வால் தாய் கஞ்சன் ஜெய்ஸ்வால். ஜெய்ஸ்வால் தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால் சிறிய இரும்புக்கடை நடத்தி வருகிறார்.

சிறுவயதிலேயே கிரி்க்கெட் மீதான ஆர்வம் காரணமாக, மும்பையில் உள்ள தாதர் பகுதிக்கு சென்ற ஜெய்ஸ்வால், ஆசாத் மைதானில் கிரிக்கெட் பயிற்சி பெற்றார். தாதரில் இருந்து ஆசாத் மைதானுக்கு அதிக தூரம் என்பதால், கல்பாதேவி எனும் இடத்துக்கு ஜெய்ஸ்வால் இடம் பெயர்ந்து அங்குள்ள பால்விற்பனை நிலையத்தில் தங்கி பயிற்சி எடுத்தார்.

ஜெய்ஸ்வால் கடையில் தங்கிக்கொண்டார். ஆனால் கிரிக்கெட் பயிற்சி முடித்துவிட்டு கடைக்கு உதவியாக ஜெய்ஸ்வால் செயல்படவில்லை என்பதையடுத்து, ஜெய்ஸ்வாலை அங்கிருந்து வெளியேற்றினார்.

மும்பையில் தங்கிக்கொள்ள எந்த இடமும் இன்றி சாலையில் தவித்த ஜெய்ஸ்வால், மைதானத்தைப் பராமரிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் சிறிய குடில் அமைத்து தங்கினார். ஒருவேளை சாப்பிடுவத்ற்கே கடும் சிமரப்பட்ட பல நாட்கள் பட்டிணியோடு நகர்த்தியதாக அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதன்பின் மைதானத்தின் ஒரு பகுதியில் பானிபூரி விற்பனை செய்து தனது தேவைகளை ஜெய்ஸ்வால் நிறைவு செய்துள்ளார்.

ஏறக்குறைய ஆசாத் மைதானத்தில் 3 ஆண்டுகள் குடில் அமைத்து ஜெய்ஸ்வால் தங்கி கிரிக்கெட் பயிற்சி எடுத்தார். ஆனால், 2013ம் ஆண்டுதான் ஜெய்ஸ்வாலின் திறமை கண்டறியப்பட்டது. மும்பையின் சான்டாகுருஷ் பகுதியில் கிரிக்கெட் அகாடெமி நடத்திவரும் ஜவாலா சிங், ஜெய்ஸ்வால் பேட்டிங் திறமையை கண்டு வியந்து ஜெய்ஸ்வாலை தன்னுடன் அழைத்துச்சென்று தங்கவைத்து, கிரிக்கெட் பயிற்சி அளித்தார்.

jais.jpg

கிரிக்கெட் அறிமுகம்

2015ம் ஆண்டு பள்ளிகளுக்கான கில்ஸ் ஷீல்ட் போட்டியில் 319 ரன்கள் குவித்தபோதுதான் ஜெய்ஸ்வால் தனக்குள் மிகப்பெரிய திறமை ஒளிந்திருப்பதை உணர்ந்தார்.அதன்பின் மும்பை 16வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் அதன்பின் 19வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் ஜெய்ஸ்வால் தேர்வாகினார்.

2018ம் ஆண்டு ஆசியக் கோப்பையை 19வயதுக்குட்பட்ட இந்திய அணி வென்றபோது, ஜெய்ஸ்வால் 318 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதைப் பெற்றார்.

19வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 173 ரன்களை ஜெய்ஸ்வால் குவித்தார்.2019ம் ஆண்டு இந்திய அணியின் 19வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்ப்பட்டார்.

2018-19ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பைத் தொடரில் மும்பை அணிக்காக ஜெய்ஸ்வால் களமிறங்கினார்.2019-20ம் ஆண்டில் விஜய் ஹசாரே கோப்பையில் ஜெய்ஸ்வால் அறிமுகமாகினார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 2019, அக்டோபர் 16ம் தேதி, ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 203 ரன்கள் சேர்த்து ஜெய்ஸ்வால் சாதனை படைத்தார். ஏ கிரிக்கெட் போட்டியில் 17 வயதில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார்.

ஏற்றம் தந்த ஐபிஎல்

2020ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஜெய்ஸ்வால் திறமையை அறிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.2.40 கோடிக்கு விலைக்கு வாங்கியது. 2020, செப்டம்பர் 22ம் தேதி டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் அறிமுகமாகினார்.

2021, அக்டோபர் 2ம் தேதி சிஎஸ்கே அணிக்கு எதிராக ஜெய்ஸ்வால் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 2023, ஏப்ரல் 30ம் தேதி டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் சதத்தை ஜெய்ஸ்வால் பதிவு செய்தார்.

ஐபிஎல் டி20 தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்தவகையில் 2023, மே 11ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் சாதனை படைத்தார். கேஎல் ராகுல், பாட் கம்மின்ஸ் சாதனையையும் ஜெய்ஸ்வால் முறியடித்தார்.

2023 ஐபிஎல் தொடர் ஜெய்ஸ்வாலுக்கு மறக்கமுடியாததாக அமைந்தது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ஸ்வாலின் பேட்டிங், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கிலியை ஏற்படுத்தியது.

தனிஆளாக களத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால்124 ரன்களை விளாசினார். அவரது ஆட்டத்தை பார்த்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வாயடைத்து போனார்.

2023, ஜூன் மாதம் இந்திய அணிக்குள் முதன்முறையாக ஜெய்ஸ்வால் வாய்ப்பு பெற்று, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிகமுகமாகினார்.

jaiswalw.jpg

அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதேபோல மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் அசத்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் 80 ரன்களும், 2வது போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக கிரிக்கெட்டின் பார்வையை ஈர்த்துள்ளார்.

வறுமையும், ஏழ்மையும் இலக்கை அடைய தடைக்கற்கள் அல்ல என்பதை ஜெய்ஸ்வால் உணர்த்திவிட்டார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்