Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

திமுகவுடன் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக தொகுதி பங்கீடு - பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக தலைவர்கள் பேட்டி

SAMYUKTHA12-02-2024
திமுகவுடன் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக தொகுதி பங்கீடு - பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக தலைவர்கள் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் விசிக தலைவர் திருமாவளவன், பொது செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: விசிக சார்பில் தனித்தொகுதிகள் 3, பொது தொகுதி ஒன்று என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். 2019ல் இருந்து இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக இயங்கி வருகிறது. அகில இந்திய அளவில் இப்படிப்பட்ட கூட்டணி பல தேர்தலை சந்திக்க கூட்டணி என்றால் அது திமுக கூட்டணியாக தான் இருக்கும். எந்த மாநிலத்திலும் தொடர்ச்சியாக கூட்டணி கட்சிகள் பயணிப்பது இல்லை. தமிழ்நாட்டில் பிஜேபி தலைமையிலான கூட்டணி, அதிமுக உள்பட உருவானது.

ஆனால், அது எப்படி இன்று சிதறி கிடக்கிறது என்பதை அறிவிவோம். அவ்வாறு கொள்கை சார்ந்து இயங்கக்கூடிய ஒரு கூட்டணியாக திமுக கூட்டணி இயங்கி வருகிறது. மேலும் அது இந்தியா கூட்டணி அளவுக்கு விரிவடைந்துள்ளது. அகில இந்திய அளவில் 28 கட்சிகள் அங்கம் வகிக்கக்கூடிய மகா கூட்டணியாக, மெகா கூட்டணியாக உருவாகி இருக்கிறது. அந்த கூட்டணியில் விசிகவும் அங்கம் வகிக்கிறது. அகில இந்திய அளவில் பாஜவை வீழ்த்த வேண்டும்.

ஆட்சி அதிகாரம் பீடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை செயல் திட்டத்தை முன்வைத்து இந்தியா கூட்டணி இயங்கி வருகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிற திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை உணர்ந்து எங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

எங்களுடைய கோரிக்கையை திமுக குழுவிடம் வைத்துள்ளோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும். தொகுதிகள் என்ன என்பதை அப்போது அறிவிப்போம். 4 தனி தொகுதிகளை கொடுத்து அதில் 3 தனி தொகுதிகளை கேட்டுள்ளோம். விழுப்புரம், சிதம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளை குறிப்பிட்டு 3 தொகுதிகளை கேட்டுள்ளோம். பொது தொகுதியில் பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதி வேண்டும் என்று கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2019 மக்களவை தேர்தலில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் பொது செயலாளர் முகமது அபூபக்கர், பொருளாளர் ஷாஜகான், தேசிய செயலாளர் அப்துல் பாஸித், தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான் குழுவினர் திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் காதர் மொகிதீன் அளித்த பேட்டி: திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இந்திய யூனியன் முஸ்லில் லீக் பயணித்து வருகிறது. இந்திய கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றியது. ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி வெற்றி பெற்றார். அவர் கடந்த 5 ஆண்டுகாலமாக தொகுதிக்கு பல்வேறு பணிகளை செய்து மக்களிடமும், கட்சியினரிடம் நற்பெயரை பெற்று வந்துள்ளார்.

எனவே, இந்த முறை எங்களுக்கே ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும். காயிதே மில்லத் காலத்தில் ராஜ்ய சபா தொகுதியில் பயணித்தோம். எனவே, இந்த முறை ராமநாதபுரம் தொகுதியுடன் சேர்த்து ஒரு மாநிலங்களவை தொகுதியையும் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அவர்களும் நல்ல முடிவு சொல்வதாக அறிவித்துள்ளார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் கட்சியினர் திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு ஈஸ்வரன் அளித்த பேட்டி: திமுக தலைமையிலான எங்களுடைய கூட்டணி 2016ம் ஆண்டு தொடங்கியது. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது நாங்கள் கூட்டணியில் இணைந்தோம். தொடர்ந்து இந்த கூட்டணியில் பயணித்து கொண்டு இருக்கிறோம்.

கூட்டணியில் பங்கேற்று வெற்றியும் பெற்று இருக்கிறோம். இந்த வெற்றி கூட்டணியில் இன்றைக்கு நாடாளுமன்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தக்கட்டமாக பேசும் போது, இன்னும் உங்கள் இடத்தில் சொல்லும் அளவுக்கு எங்களுடைய கருத்துக்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

கூட்டணி பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக, முடிவை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது. அடுத்தக்கட்டமாக சந்திக்கும் போது இன்னும் விரிவாக இன்னும் சொல்ல முடியும். திமுக தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதை தான் கருத்து கணிப்பு முடிவுகளும் சொல்லியிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். கடந்த முறை கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்