Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

சந்தேஷ்காளி வன்முறை; மே.வ சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 6 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

PRIYA12-02-2024
சந்தேஷ்காளி வன்முறை; மே.வ சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 6 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காளி பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 6 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேற்கு வங்க சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் தொடங்கிய உடன் பாஜக எம்எல்ஏக்கள் திரிணாமூல் அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். சந்தேஷ்காளி விவகாரத்தை அவர்கள் எழுப்பினர்.

24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகானின் கும்பல் தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை நடத்தினர். இதனால் ஷாஜகானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவரது வீட்டில் தான் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதிலிருந்து ஷாஜகான் தலைமறைவாக உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர், ஷாஜகான் கும்பலைச் சேர்ந்த ஷிபோபிரசாத் ஹஸ்ரா என்பவருக்கு சொந்தமான இடங்களுக்கு தீவைத்தனர். இந்த சம்பவத்தில் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் இப்போது பற்றி எரியத் தொடங்கி உள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜக, சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது. சட்டமன்றத்தின் தரையில் அமர்ந்து அவர்கள் முழக்கமிட்டனர்.

இதையடுத்து சபாநாயகர் பிமன் பானர்ஜி அறிவுறுத்தலின் பேரில் எம்எல்ஏ சோபானதேப் சாட்டர்ஜி, பாஜக எம்எல்ஏக்கள் மீது இடை நீக்க தீர்மானத்தை கொண்டுவந்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

எதிர்கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரி, அக்னிமித்ரா பவுல், மிஹிர் கோசுவாமி, பான்கிம் கோஷ், தபசி மொண்டல, சங்கர் கோஷ் ஆகிய 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மேற்கு வங்க ஆளுநர் சி.பி. ஆனந்த் போஸ், மாநிலத்துக்கு திரும்பினார். அவர் சந்தேஷ்காளிக்கு சென்றார். அவரது வழியை திரிணாமூல் காங்கிரசார் மறித்தனர்.

சந்தேஷ்காளி சென்ற ஆளுநர் அங்கு கண்ட காட்சிகள் மிகவும் மோசமானதாகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது என கூறினார். தனது அதிகாரத்துக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் விரிவான அறிக்கை அளிக்க கேட்டுள்ளார்.

சந்தேஷ்காளி வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் பாஜகவும் காம்யூனிஸ்டுகளும் இருப்பதாக திரிணாமூல் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்