Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

தேர்தல் பணிகளில் ஒப்பந்ததாரர்கள்…பல் இழிக்கும் சாலைகள்

LENIN DEVARAJAN02-04-2024
தேர்தல் பணிகளில் ஒப்பந்ததாரர்கள்…பல் இழிக்கும் சாலைகள்

மக்களவை தேர்தல் பணிகளில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளதால் சாலை புனரமைப்பு பணிகள் முழுமை பெறாமல் பாதியிலேயே நிற்பதாக அதிகாரிகள் வருந்துகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் சென்னை, காஞ்சிபுரம்., செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ’மிக்ஜாங்’ புயல் வீசியதில் சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பொதுக்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தது.

சேதம் குறித்து தமிழக அரசு சார்பில் ஆய்வு செய்து கணக்கெடுக்கப்பட்டு, சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அந்த வகையில், ’மிக்ஜாங்’ புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக சாலைகள் உள்ளிட்ட பொது கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, சாலை சீரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டது.

’மிக்ஜாங்’ புயலால் சேதமடைந்த சாலைகளை சில பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் சீர்செய்தாலும், பல இடங்களில் மில்லிங் மட்டும் செய்யப்பட்டு கிடப்பில் போட்டுவிட்டு தேர்தல் பணிகளை பார்க்க சென்றுவிட்டதாக அதிகாரிகள் புலம்புகிறார்கள்.

சென்னையில், மாதவாரம் நெடுஞ்சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.என்.டி.நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கடுமையாக சேதமடைந்து இருப்பதாக பொதுமக்கள் புகாரளிக்கிறார்கள்.

அதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சாலைகளும் சிதிலமடைந்திருப்பதாக பொதுமக்கள் புலம்புகிறார்கள். இந்த சாலைகளில் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் பயணிக்கும் போது பல்வேறு விபத்துகளை சந்திப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். ஒப்பந்ததாரர்கள் புதிய சாலைகள் அமைப்பதற்காக, சாலைகளை பெயர்த்துவிட்டு அப்படியே சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜல்லி கற்கள், தார் விலை உயர்வால் ஒப்பந்ததாரர்கள் சாலைகள் சீரமைப்பு பணிகளை கிடப்பில் போட்டு சென்றுவிட்டதாக பேச்சுகள் அடிபட்டாலும், ஒப்பந்ததாரர்கள் பலர் ஆளுங்கட்சியான திமுகவினர் என்பதால் அதிகாரிகள் தலையில் துண்டை பொட்டு விரக்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அரசுத் துறை ஒப்பந்தங்கள் பெரும்பாலும் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ, அவர்களின் ஆதரவாளர்களுக்கு பெரும்பாலும் கொடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்தது. அந்த வகையில், மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் அனைத்து ஒப்பந்ததாரர்களும் தங்களது எஜமானர்களான அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டதாக அதிகாரிகள் வருந்துகிறார்கள்.

இதனால், மில்லிங் செய்யப்பட்ட சாலைகளை சீரமைக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாக அதிகாரிகளும் பொதுமக்களும் தெரிவிக்கிறார்கள்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்