Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பா? கிரவுண்ட் ரிபோர்ட் சொல்வது என்ன?

LENIN DEVARAJAN02-04-2024
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பா? கிரவுண்ட் ரிபோர்ட் சொல்வது என்ன?

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அதிருப்தி நிலவி வரும் நிலையில், எந்த நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் ”நாடும் நமதே, நாற்பதும் நமதே” என பரப்புரைகளில் முழங்குகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான ’இண்டியா’ கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்த நிலையிலும், காங்கிரஸ் கட்சியில் குத்துவெட்டு நிலவியது. உட்கட்சி விவகாரம் தொடர்பாக யாருக்கு சீட் கொடுப்பதில் காங்கிரஸ் மேலிடமே குழம்பி போனதாக தகவல் வெளியானது. இன்று காங்கிரஸ் வேட்பாளர்களாக உள்ள பலர் போராடி தான் சீட் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

பெரும்பாலான தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க விரும்பாமல் திமுகவினரே பரப்புரைகளில் இருந்து நழுவுவதாகவும், தேர்தல் பணிகளில் ஈடுபட தயக்கம் காட்டுவதாகவும் கிரவுண்ட் ரிப்போர்ட் சொல்கிறது.

இதற்கு முக்கிய காரணம் அதிருப்தியாம். கடந்த பிப்ரவரி மாதம் திமுக கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர் இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு 7 சீட்டுக்கு மேல் தாண்டாது என திமுகவினர் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், கடந்த மக்களவை தேர்தலை போல் இந்த தேர்தலிலும் 10 சீட்டை ஒதுக்கியது திமுக. இதனால் கடுப்பான திமுகவினர், திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்ட முடிவு செய்தார்களா என்னவோ தெரியவில்லை, காங்கிரஸ் வேட்பாளர்களை அருகில் வைத்து பரப்புரைகளில் அவேசமாகவும், அவதூறாகவும் பேசுகிறார்கள். அதை தான் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அருகில் வைத்தே கூட்டத்தில் கேள்வி எழுப்பியவரிடம் அவேசத்தை காட்டினார் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ரஜேந்திரன். இதே நிலை தான் பல்வேறு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும்.

கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்குகள் சேகரிக்க சென்ற போது, கடந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு நன்றி தெரிவிக்கக் கூட ஏன் வரவில்லை என தொண்டர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தலைதெறிக்க ஜோதிமணி ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

ஆரணி தொகுதியில் இம்முறை காங்கிரஸ் போட்டியிட்டால் திமுகவினரே கட்சிக்கு எதிராக வேலை செய்வார்கள் என பேசப்பட்டது. இதனை அறிந்த திமுக தலைமை தரணிவேந்தனுக்கு சீட் கொடுத்ததாக பேச்சுகள் அடிபட்டது. இதனால், ஆரணிக்கு ’பை பை’ சொல்லி கடலூருக்கு ஓடியிருக்கிறார் விஷ்ணு பிரசாத். அதே நிலை தான் நெல்லை, கிருஷ்ணகிரி, சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது காங்கிரஸ் கட்சியினரும், திமுகவினரும் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எந்த நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் ”நாடும் நமதே, நாற்பதும் நமதே” என பரப்புரைகளில் முழங்குகிறார் என சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்