Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு; ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

PRIYA02-04-2024
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு; ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லியில் ஆட்சியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய மதுபானக் கொள்கையை வகுத்து செயல்படுத்துவதில் ஊழல் நடந்ததாகவும் அதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

இதில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் எம்பியுமான சஞ்சய் சிங் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர். கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தற்போது சிறையில் உள்ளார்.

இந்நிலையில் சஞ்சய் சிங்கின் ஜாமீன் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபங்கர் தத்தா மற்றும் பி.பி. வராலே ஆகிய 3 பேர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை சார்பாக கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜரானார். அவரிடம், சிங்கிடம் இருந்து எந்த பணமும் கைப்பற்றப்படாத போது, ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி நீதிமன்ற விசாரணையின் போது அறிந்து கொள்ளலாமே என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக மாறி உள்ள தினேஷ் அரோரா, தனது முதற்கட்ட வாக்குமூலத்தில் சிங்கின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதை நீதிபதிகள் கருத்தில் கொண்டனர்.

சிங்குக்கு ஜாமீன் வழங்க, அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து நீதிபதிகள் சஞ்சய் சிங்குக்கு சாதாரண ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் இந்த வழக்கு பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என சஞ்சய் சிங்குக்கு அறிவுறுத்தினர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற சஞ்சய் சிங், தனது எக்ஸ் பக்கத்தில், ‘சத்யமேவ ஜெயதே’ என பதிவிட்டு இருந்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்