Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு; கடப்பாவில் ஒய்.எஸ். சர்மிளா போட்டி, அமேதி, ரேபரேலியில் தொடரும் சஸ்பென்ஸ்

PRIYA02-04-2024
காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு; கடப்பாவில் ஒய்.எஸ். சர்மிளா போட்டி, அமேதி, ரேபரேலியில் தொடரும் சஸ்பென்ஸ்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் 11வது பட்டியல் செவ்வாய் கிழமை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஒய்.எஸ். சர்மிளா, ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் இந்த பட்டியலிலும் இடம் பெறவில்லை.

ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள், பிகார் மாநிலத்தில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் என 17 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய். எஸ். சர்மிளா. இவர் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி காங்கிரசில் இணைந்தார். அவருக்கு ஆந்திர மாநில தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இப்போது, கடப்பா மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பிகாரில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் கிஷான்கஞ் தொகுதியில் எம்பி முகமது ஜாவெத் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர், கதிஹார் தொகுதியில் போட்டியிடுகிறார். பகல்பூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜீத் ஷர்மா களம் இறக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜு காக்கிநாடா தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சி இதுவரை 228 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளான அமேதி, ரேபரேலியில் யார் போட்டியிட உள்ளார்கள் என்பது இந்த பட்டியலிலும் வெளியிடப்படவில்லை.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடக்கிறது. 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்