Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

முரசொலி நிலம் வழக்கு: மேல் நடவடிக்கை கூடாது என்று SC/ST ஆணையத்திற்கு அறிவுறுத்தல் - மத்திய அரசு உத்தரவாதம்

SAMYUKTHA02-04-2024
முரசொலி நிலம் வழக்கு: மேல் நடவடிக்கை கூடாது என்று SC/ST ஆணையத்திற்கு அறிவுறுத்தல் - மத்திய அரசு உத்தரவாதம்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தை அறிவுறுத்துவதாக ஒன்றிய அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ல் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு ஆஜராகுமாறு முரசொலி அறக்கட்டளைக்கு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்க ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் நீதிபதிகளிடம் கோரினார். அப்போது திமுக அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இதே விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்கில் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசே, இந்த சொத்து பஞ்சமி நிலமல்ல என்று 2019ல் தெரிவித்துள்ளது. எனவே, சொத்தின் உரிமை குறித்து ஆணையம் விசாரிக்கலாம் என்று தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த விவகாரத்தில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று ஆணையத்தை அறிவுறுத்துவதாக உறுதியளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்