Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

₹2.5 கோடி பணம் பதுக்கலா? விசிக பிரமுகர் வீட்டில் ரெய்டு - வாரண்ட் கேட்டு பறக்கும்படையிடம் வாக்குவாதம்

SAMYUKTHA02-04-2024
₹2.5 கோடி பணம் பதுக்கலா? விசிக பிரமுகர் வீட்டில் ரெய்டு - வாரண்ட் கேட்டு பறக்கும்படையிடம் வாக்குவாதம்

ஓமலூர் அருகே, போலீஸ் ஏட்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் வீட்டில் ₹2.5 கோடி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மோலாண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஆதிதமிழன் (எ) பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியாக உள்ளார். தற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பணம் பதுக்கி வைத்திருப்பதை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு, ஓமலூர் அருகே மோலாண்டிப்பட்டியில் வசிக்கும் தலைமை காவலர் புவனேஸ்வரி வீட்டில் ₹2.5 கோடி பணம், தேர்தலுக்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் இன்று அவரது வீட்டிற்கு சோதனை செய்ய சென்றனர். ஆனால் அங்கு வாரண்ட் கேட்டதால், சேலம் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அங்கு வந்த அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் பெருமாள், சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால், அதிகாரிகள் சோதனை செய்யாமல் வீட்டுக்கு வெளியே இருந்தனர். தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வருமான வரித்துறை உதவி ஆணையர் பிரதீப் தலைமையிலான அதிகாரிகள், வந்தபோது பெருமாள் சோதனை செய்ய ஒப்புதல் தருவதாக கூறினார். இதையடுத்து வீட்டில் சோதனை நடத்தினர். தொடர்ந்து வீட்டுக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனர். கார், கழிவறை, கொட்டகை, படுதாக்கள் ஆகியவற்றையும் சோதனை செய்தனர்.

சுமார் அரை மணி நேரம் நடந்த சோதனையில், வீட்டில் பணமோ நகையோ எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அதிகாரிகள் வெளியே வந்தனர். தேர்தல் நேரத்தில் யாரோ வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்பி தனது பெயருக்கும் தனது மனைவி பெயருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருமாள் தெரிவித்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் இது பொய்யான தகவல் என்றும் வீட்டில் பணம் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்