Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த ஓ.பி.எஸ்…பரப்புரையின் போது சுவாரசியம்

LENIN DEVARAJAN02-04-2024
இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த ஓ.பி.எஸ்…பரப்புரையின் போது சுவாரசியம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனக்கு ஒதுக்கப்பட்ட சுயேச்சை சின்னமான பலாபழத்திற்கு வாக்குகள் சேகரிப்பதற்கு பதில், இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட நிக்ழவு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தற்போது ஓ.பி.எஸ். பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2022-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவரோடு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனால், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற இயக்கத்தை தொடங்கி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ். கடந்த சில மாதங்களாக செயல்படுகிறார்.

வரும் மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் சுய்யேச்சை வேட்பாளராக ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். சுயேச்சையாக போட்டியிட்டாளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவோடு களமிறங்கியுள்ளார்.

வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ளது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் செய்து வெற்றிபெற்று, எப்படியாவது நாடாளுமன்ற மக்களவையில் அதிமுகவின் சார்பில் தனது குரல் ஒலிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து செயல்படுகிறார் ஓ.பி.எஸ்.

அதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

முன்னதாக, அதிமுகவின் ’இரட்டை இலை’ சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு அளித்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தார். ஓ.பி.எஸ். தரப்பு, ”தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, பாஜக ஆதரவோடு ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ.பி.எஸ். தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்தார். அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் ’பக்கெட்’ சின்னம் ஒதுக்க வேண்டும் எனவும் மனுவில் ஓ.பி.எஸ். குறிப்பிட்டிருந்தார். பிறகு ஓ.பி.எஸ்.க்கு பலாப்பழம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

அதேபோல், அதிமுகவின் கொடி, சின்னம், கரை வேட்டி, லெட்டர் ஹெட் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு நிரந்தர தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இப்படி அனைத்து பக்கங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்ட நிலையில், அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக அதிமுகவினர் கிண்டல் செய்கிறார்கள்.

மூன்று முறை தமிழக முதல்வர் என்ற பெயரை தவிர ஓ.பி.எஸ்.க்கு சொல்லக்கூடிய வகையில் எதுவும் இல்லை என்றும், ஓ.பி.எஸ் அரசியலில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டவர் என அதிமுகவினர் விமர்சிக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு தீவிரமாக வாக்குகள் சேகரித்தார். தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, இன்று ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பரப்புரை மேற்கொண்ட போது ” உங்களது பொன்னான வாக்குகளை வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என முதலில் கூறிய ஓ.பி.எஸ்., பின்னர் சுதாரித்துக் கொண்டு பலாபழத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அதற்கு ”பழக்க தோஷத்தில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டேன்” என ஓ.பி.எஸ். சமாளித்த போது பிரச்சாரத்தில் சிரிப்பலைகள் ஏற்பட்டது.

தற்போது, ஓ.பி.எஸ். இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்