Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மோடி, ராகுல் தேர்தல் விதி மீறல்; விளக்கம் கோரி கட்சிகளின் தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

PRIYA25-04-2024
மோடி, ராகுல் தேர்தல் விதி மீறல்; விளக்கம் கோரி கட்சிகளின் தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் விதிமுறையை மீறி பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி உரையாற்றியது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி பாஜக தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பி உள்ளது. ஏப்ரல் 29ம் தேதி காலை11 மணிக்குள் பதிலளிக்க கோரியுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகளின் தலைவர்கள் மக்களைக் கவரும் வகையில் பேசி பிரச்சாரம் செய்கின்றனர். அப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஆட்சியின் குறைகளை விமர்சனம் செய்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் நாட்டில் ஏழ்மை நிலை அதிகரித்து இருப்பதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்தாக கடந்த திங்களன்று பாஜக குற்றம் சாட்டியது. இது குறித்து தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. மேலும், நாட்டை வடக்கு, தெற்கு என பிளவு படுத்தும் வகையில் தொடர்ந்து ராகுல் காந்தி பேசி வருவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

இது போல் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை முஸ்லீம்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடும் என்று பேசியது தொடர்பாக காங்கிரஸ் புகார் அளித்து இருந்தது. மேலும், பிரச்சாரங்களின் போது தீங்கிழைக்கும் வெறுப்புணர்வு பேச்சுக்களைப் பேசி வருவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தது.

இவற்றின் அடிப்படையில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தியின் பேச்சுக்கள் குறித்து விளக்கம் அளிக்க இரு கட்சித் தலைவர்கள் நட்டா மற்றும் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77ன் கீழ் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் நடத்தைகளுக்கு கட்சியே முதன்மை பொறுப்பு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் உயர் பதவியில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சார பேச்சுக்கள் பெரும் பின்விளைவுளை ஏற்படுத்திவிடும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புகார்கள் பற்றி ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்