Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

தேர்தல் விதிமுறை மீறல்; மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

PRIYA29-04-2024
தேர்தல் விதிமுறை மீறல்; மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரங்களில் விதிமுறைகளை மீறி கடவுள்களின் பெயரை பயன்படுத்தி பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பதால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து 6 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இந்த மனுவை ஆனந்த் எஸ் ஜோன்தலே என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்து இருந்தார். அதில் மோடியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி இருந்தார். மேலும், கடவுள்களின் பெயரில், வழிபாட்டுத் தலங்களில் வாக்கு சேகரிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். இதை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்தார்.

அப்போது மனுதாரர் தவறாக கருதிக்கொண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறுவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், ஒரு புகாரை இந்த கோணத்தில் அணுகி நடவடிக்கை எடுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் சார்பாக வழக்கறிஞர் சித்தாந்த் குமார் ஆஜராகி, இது போன்ற பல புகார்கள் நாள்தோறும் வருவதாகவும், ஜோன்தலேவின் புகாரின் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஜோன்தலேவின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி பேசியதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஜோன்தலே புகார் அளித்து இருந்தார். அதில் பிரதமர் மோடியின் பேச்சு மக்களிடையே மதம் மற்றும் சாதி ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜோன்தலே குறை கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்