Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

அமேதியில் ஸ்மிருதி இரானி வேட்பு மனு தாக்கல்: எதிர்த்து ராகுல் போட்டி? காங்கிரஸ் உற்சாகம்

CHENDUR PANDIAN.K29-04-2024
அமேதியில் ஸ்மிருதி இரானி வேட்பு மனு தாக்கல்: எதிர்த்து ராகுல் போட்டி?  காங்கிரஸ் உற்சாகம்

லக்னோ

உத்தர பிரதேச மாநிலம், அமேதி மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி இன்று தனது வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் அவரை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுவார் என மாநில தலைமை அறிவித்திருப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மீண்டும் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.

இன்று காலை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் முக்கிய தலைவர்கள் அவரிடம் சென்றனர். முன்னதாக அவர் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றார்.

ராகுல் போட்டி?

அவரை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுவார் என்ற மாநில காங்கிரஸ் தலைமை அறிவிப்பால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில், கடந்த 2014-ஆம் ஆண்டில் ராகுல் காந்தியை எதிா்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வியைத் தழுவினாா். ஆனால், 2019 தோ்தலில் ராகுலை சுமாா் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் தோற்கடித்தாா்.

தற்போதைய தோ்தலில் அமேதி தொகுதியில் பாஜக சாா்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களம்காண்கிறாா். அதேநேரம், இத்தொகுதிக்கு காங்கிரஸின் வேட்பாளா் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மக்களவைக்கு ஐந்தாம் கட்ட தோ்தல் நடைபெறும் மே 20-ஆம் தேதியன்று அமேதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அமேதி தொகுதி பாஜக எம்.பி.யான இரானி, கெளரிகஞ்ச் பகுதியில் உள்ள மேடன் மவாய் கிராமத்தில் புதிதாக வீடு கட்டி, கடந்த பிப்ரவரி மாதம் குடிபுகுந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது‌.

இதற்கிடையில், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அஜய் ராய் அறிவித்து இருக்கிறார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் போட்டி என்ற அறிவிப்பை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. அஜய் ராயின் அறிவிப்பு குறித்து பாஜகவைச் சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்வி, காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், "காங்கிரஸ் கட்சி அமேதி தொகுதியை தங்களது தனிச்சொத்து போல கருதி மக்களை சுவிங்கம் போல் மெல்கிறது. மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

இதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஷீத் ஆல்வி பதிலடி கொடுக்கும் வகையில், "ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டால் ஸ்மிருதி இரானி தனது டெபாசிட் தொகையைக் கூட இழப்பார். அவர் அமேதி தொகுதியை விட்டே ஓடவும் கூடும். அவரை அவ்வாறு ஓட விடவேண்டாம் என்று நான் பாஜகவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மோடியை எதிர்த்து பிரியங்கா ?

அதேபோல பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டால் பிரதமர் நரேந்திர மோடி தொகுதியை விட்டுச் செல்ல வேண்டியது இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியைத் தழுவியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக ராகுல் காந்தியை வேட்பாளராக அறிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், "பிரியங்கா காந்தியை சிறந்த தலைவராக நிலைநிறுத்த வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் கோரிக்கை. எங்கிருந்து போட்டியிட வேண்டும் என்பது அவர்களின் (சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி) விருப்பம். அவர்களை வெற்றி பெற வைக்க எங்களின் கடும் உழைப்பை வெளிப்படுத்துவோம்" என்றார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட்ட அஜய் ராய் தோல்வியடைந்திருந்தார். வரும் தேர்தலில் வாரணாசியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, "நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன். மற்ற விஷயங்களை கட்சியின் தலைமை மற்றும் "இண்டியா கூட்டணி" முடிவு செய்யும்" என்று கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்