Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரியது அமலாக்கத்துறை

SAMYUKTHA29-04-2024
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரியது அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை மெத்தன போக்கோடு செயல்படுவது மட்டுமில்லாமல், காலதாமதம் செய்து வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய் எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், ‘சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நீண்ட மாதங்களாக சிறையில் இருப்பதை அடிப்படையாக கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அதேபோல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அமலாக்கத்துறை தரப்பில் விசாரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 1ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதொடர்பாக பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இதையடுத்து அமலாக்கத்துறை வாதங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ராம் சங்கர், ‘இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று (திங்கட்கிழமை) வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வேண்டுமென்றே அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மெத்தன போக்கை கடைபிடிப்பது மட்டுமில்லாமல், கால தாமதம் செய்து வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்கிறது’ என்ற கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விவகாரத்தில், கால தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது உன்மை தான். அதற்காக நாங்கள் மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே. 6ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு செந்தில் பாலாஜி தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்