Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

VASUKI RAVICHANDHRAN12-02-2024
பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், முரசொலி அறக்கட்டளையின் மேல்முறையீடு மனு குறித்து பதிலளிக்கவும் தேசிய பட்டியிலினத்தோர் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி-யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, விதிகளின்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீடு வழக்கு குறித்து தேசிய பட்டியிலினத்தோர் ஆணையம், புகார்தாரர் சீனிவாசன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் சீனிவாசன் அளித்த புகார் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்