Logo
Logo

முக்கிய செய்தி:

சவுக்கு ஸ்பெஷல்

மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதி ஆணையத்துடன் ரகசிய பேரம் பேசிய பிரதமர் மோடி: வெளிவராத புதிய தகவல்கள்

PRITHIVIRAJ18-01-2024
மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதி ஆணையத்துடன் ரகசிய பேரம் பேசிய பிரதமர் மோடி: வெளிவராத புதிய தகவல்கள்

2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றவுடன், புறவாசல் வழியாகச் சென்று, மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டை பெருமளவு குறைக்க நிதி ஆணையத்துடன் பேரம் பேசிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் வரியிலிருந்து மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டை, பங்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தில் இருக்கும் சுயாட்சி அமைப்பு நிதி ஆணையம். பிரதமர் மோடியின் இந்த பேரத்தை நிதி ஆணையம் ஏற்காததையடுத்து, வேறுவழியின்றி மோடி தனது பேரத்திலிருந்து பின்வாங்க வேண்டியிதிருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு முதன்முதலாகப் பதவி ஏற்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த 48 மணிநேரத்தில் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதில் நிதி ஆணையம் உறுதியாக இருந்தது. இந்த பட்ஜெட்டில் நலத்திட்டங்களுக்கான நிதியை பெருமளவு குறைத்த மோடி அரசு, மத்திய அரசிடம் வரிப்பகிர்வு நிதியின் பெரும்பகுதி இருக்குமாறு பார்த்துக்கொண்டது.

modi-pti.jpg

அதேநேரம், வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கான வரி பகிர்வை ஒதுக்கி நிதி ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை வரவேற்கிறேன் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பொய்யான தகவலையும் தெரிவித்தார்.

பேரம் பேசிய பிரதமர் அலுவலகம்

நிதிஆணையத்தின் தலைவர் ஒய்வி ரெட்டிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே பேரம் பேசியதில் பின்னால் இருந்து செயல்பட்டது பிவிஆர் சுப்பிரமணியம்தான். இந்த பிவிஆர் சுப்பிரமணியம் தற்போது நிதிஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். இதற்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகவும் பிவிஆர் சுப்பிரமணியம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின் நிதிப் பகிர்வைக் குறைக்க பிரதமரும், அவரின் குழுவினரும் முயற்சி எடுத்தோம் என்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது இதுதான் முதல்முறை.

பொருளாதார வல்லுநர்கள், விமர்சகர்கள், எதிர்க்கட்சிகள் ஆகியவை சேர்ந்து மத்திய அரசின் போலியான கணக்குகள் குறித்தும், மாநிலங்களுக்கான நிதியைக் குறைத்தது குறித்தும் புகார் கூறிய நிலையில், மத்தியில் ஆளும் அரசில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவர் முதல்முறையாக மத்திய அரசின் நிதிநிலை மற்றும் கணக்குகள் சரியாக இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

modi ls.jpg

அரசுசாரா நிறுவனமான சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான மையம் சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்தியாவின் நிதிநிலை குறித்த கருத்தரங்களில் பிவிஆர் சுப்பிரமணியம் பங்கேற்றார். அப்போது இந்த தகவல்களை அவர் அங்கிருந்த வல்லுநர்களிடம் பகிரந்து கொண்டார்.

உண்மைத் தகவல்கள் மறைப்பு

இந்த கருத்தரங்கில் பேசிய சுப்பிரமணியம் “ மத்திய பட்ஜெட்டில் உண்மையான தகவல்களை மறைப்பதற்காக எவ்வாறு அடுக்கடுக்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும், மத்திய அரசின் கொள்கைகள் எவ்வாறு படிப்படியாக மாநிலங்களின் வருவாயைக் கட்டுப்படுத்தியது என்பதையும், மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்களின் கணக்குகளை சிறப்பாக வைத்திருக்க எந்த வகையான தந்திரங்களை கையாள்கின்றன” என்பது குறித்தும் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய அனைத்து பட்ஜெட் ஆவணங்களை “ தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ்” சுயாதீனமாக ஆய்வு செய்தது.

அரசாங்கத்தின் நிதியுதவி பெற்ற உள்கட்டமைப்பு திட்டத்தில் நிதி மோசடி மற்றும் தில்லுமுல்லு குறித்த விவரங்களையும் வெளியிட்ட சுப்பிரமணியம் அது ஒரு ‘வேடிக்கையான வழக்கு’ என்று குறிப்பிட்டார்.

நிதி ஆணையத்தின் ஊழல்

இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, சுயாதீனமுள்ள நிதி ஆணையம் என்பது பொருளாதார வல்லுநர்கள், பொதுநிதியைக் கையாளும் வல்லுநர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த நிதிஆணையம், வரி வசூலில் மாநில அரசுகளுடன், மத்திய அரசு எந்த சதவீதத்தில் வரியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

2013ம் ஆண்டு 14-வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் குஜராத்தில் நரேந்திர மோடி 13-வதுஆண்டாக முதல்வராக இருந்தார். அந்த நேரத்தில் தேர்தலில் பிரதமர் பதவிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நரேந்திர மோடி, நிதி ஆணையம் மாநிலங்கள் வழங்கும் வரியில் 50 சதவீதத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கோரியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

2014ம் ஆண்டு நிதிஆணையம் தனது பரிந்துரையில் மாநிலங்கள் மத்திய அரசின் வரியிலிருந்து 42 சதவீதத்தை பெறலாம் என்று தெரிவித்தது. இதற்கு முன் மாநிலங்களுக்கான வரி 33 சதவீதமாக இருந்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமராக வந்தபின், அவரின் ஆட்சியில் இருந்த நிதி அமைச்சகம் மாநிலங்களுக்கான வரி பகிர்வு சதவீதத்தை 33 சதவீதமாகக் குறைத்தது.

nitiayog.jpg

அரசியலமைப்பு விதிகளின் கீழ் மத்திய அரசுக்கு இரு வாய்புகள் மட்டுமே உள்ளன. அதாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் அல்லது அவற்றை மறுத்துவிட்டு புதிய ஆணையத்தை உருவாக்கலாம். ஆனால், மத்திய அரசு நிதி ஆணையத்துடன் முறைப்படியோ அல்லது மறைமுகமாகவோ வாதிடவோ அல்லது பேரம் பேசவோ முடியாது.

ஆனால், நிதி ஆணையத்தின் தலைவர் ஒய்.வி. ரெட்டியிடம், வருவாய் பங்கீடு குறித்த தனது பரிந்துரைகளை சமர்பிக்குமாறு மத்திய அரசு ரகசியமாக கேட்டுக்கொள்ள முயன்றது. இது குறித்து சுப்பிரமணியம் பேசுகையில் “ இந்த உரையாடலில் நான் மட்டும்தான் மற்றொருவர்.

ஆனால், இவ்வாறு நடந்து கொள்வது அரசியலமைப்பை மீறுவது போன்றது. இதில் பேரத்தில் மத்திய அ ரசு வென்றுவிட்டால், மாநிலங்களுக்கான வரிவசூலில் நிதிப்பகிர்வை குறைக்க முடியும். இதற்கான பழியை நிதி ஆணையத்தின் மீது போட்டுவிடலாம்.

டாக்டர் ரெட்டி, நான் மற்றும் பிரதமர் ஆகிய 3 பேருக்கும் இடையேதான் இந்த விவாதம் நடந்தது. நிதி அமைச்சகத்தில் இருந்து எந்த அமைச்சரும், உயர் அதிகாரியும் இதில் பங்கேற்கவில்லை. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு 42 சதவீதமாக அல்லது 32 சதவீதமா என்று ஆலோசிக்கப்பட்டது.

இதற்கு முன் 32 சதவீதமாக இருந்தது. ஏறக்குறைய 2 மணிநேரம் இந்த விவாதம் நடந்தது. ஆனால், இந்த பேரத்துக்கு ரெட்டி உடன்படவில்லை. தெளிவான தென்இந்திய ஆங்கிலத்தில் பேசிய ரெட்டி, “ உங்கள் பாஸிடம்(பிரதமர்) கூறுங்கள். எனக்கு வேறு வழி ஏதும் இல்லை” எனத் தெரிவித்தார். இறுதியாக நிதி ஆணையம் பரிந்துரைத்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 42 சதவீதம் என்ற வீதத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது” எனத் தெரிவித்தார்.

14-வது நிதி ஆணையம் இருந்தபோது அதில் பணியாற்றிய உயர் அதிகாரியிடம் “ தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ்” இதை உறுதி செய்தது. அதில் “ நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்பதில் சில தாமதங்களும், விவாதங்களும் நடந்தன” என்பது தெரியவந்தது.

modi.jpg

அது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் மத்திய அரசுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒரு பொருளாதார வல்லுநர் கூறுகையில் “ நிதி ஆணையத்தின் அறிக்கையை நிராகரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது, ஆனால், அறிக்கையை மாற்றித்தரக் கேட்க அதிகாரம் இல்லை. இதற்கு முன் நிதிஆணையத்தின் அறிக்கையை ஒருமுறை டம்டுமே கடந்த கால அரசு நிராகரித்தது.” எனத் தெரிவித்தார்.

சுப்பிரமணியம் பேசுகையில் “ நாடாளுமன்றத்திலும் மோடியும் அவரின் அரசும், மாநிலங்களுக்கான வருவாய் சதவீதத்தைக் குறைக்க முயற்சி எடுத்து அதில் தோல்வி கண்டனர்.

2015, பிப்ரவரி 27ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “ தேசத்தை வலிமையாக்க, மாநிலங்களை வலிமைபடுத்த வேண்டும். நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள் மத்தியில் பெரிய விவாதம் நடந்து வருகிறது. இதை நாம் சாதகமாக எடுக்கலாம். ஆனால், செய்யவில்லை,நம்மைப் பொறுத்தவரை மாநிலங்கள் வசதியாக இருக்க வேண்டும், வலிமையாக இருக்க வேண்டும். 42 சதவீத பங்களிப்பை வழங்குவோம்.

அனைத்து நிதிப் பகிர்வையும் வைத்துக்கொள்ள சில மாநிலங்களிடம் போதுமான கருவூலம் இல்லை.” என்றார். இதைக் கேட்டதும் அவையில் இருந்த பாஜக எம்.பி.க்கள் கைதட்டி சிரித்து ரசித்தனர்.

2015ம் ஆண்டு பட்ஜெட் 2 நாட்களில் எழுதப்பட்டது. ஏனென்றால், நிதிஆணையத்தின் பரிந்துரைகள் மிகத்தாமதமாகவே ஏற்கப்பட்டன. இதனால் அனைத்துமே தாமதமாகவே எழுதப்பட்டன. நிதிஆயோக்கின் கூட்ட அரங்கில் அமர்ந்து 4 பேர் மட்டுமே ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் ஆய்வு செய்தோம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

பட்ஜெட்டில் பெண்கள், குழந்தைகள் நலனுக்கான நிதியைக் குறைத்தோம். 3 6ஆயிரம் கோடியிலிருந்து ரூ.18ஆயிரம் கோடியாகக் குறைத்தோம். மகப்பேறு பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு சூடான உணவு வழங்கும் திட்டத்துக்கான நிதியையும் குறைத்தோம். 2015ம் நிதிஆண்டில் நிதியை பெருமளவு குறைத்தது. முந்தைய ஆண்டைவிட கல்விக்கான நிதி ஒதுக்கீடு 16 சதவீதம் குறைக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

உண்மையை மறைக்க முயற்சி

சுப்பிரமணியம் பேசுகையில் “ மத்திய பட்ஜெட் என்பது, உண்மைகளை மறைக்க பல்வேறு படிவங்களைப் போர்த்தி எடுக்கப்பட்ட முயற்சி. இந்தியாவின் கணக்குகளை ஆய்வு செய்ய ஹிண்டன்பர்க் வர வேண்டும்.

ஜேபி மோர்கன் மற்றும் சிட்டி பேங்க் ஆகியவை பட்ஜெட்டை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் “உண்மையில் உண்மை நிலவரம் என்ன என்பதை வெளிப்படுத்தியது. இந்திய அரசாங்கத்தின் கணக்குகளை பகுப்பாய்வு செய்வதில் உள்நாட்டு நிறுவனங்களை விட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் நேர்மையானவர்கள்.

மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் நம்பத்தகாதவை. ஏனெனில் இரு நிலைகளிலும் உள்ள அரசாங்கங்கள் கணக்கியல் தந்திரங்களையும் சில சமயங்களில் எளிய மோசடிகளையும் பயன்படுத்தி எவ்வளவு கடன் இருக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்காமல் தவிர்க்கின்றன” எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இருக்கும் முக்கியக் கவலை மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை எந்த நிலையில் இருக்கிறது என்பதுதான். வரியிலிருந்து எவ்வளவு ஈட்டுகிறது மத்திய அரசு, மற்ற வருவாய் இனங்கள் எவ்வளவு கிடைக்கிறது,

கடன் வாங்குவதன் மூலம் கிடைப்பவை என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். நிதிப்பற்றாக்குறைய ஆரோக்கியமற்று இருந்தால், எதிர்மறையாக இருந்தால், முதலீட்டாளர்கள் அச்சமடைவார்கள். இது பொருளாதார வள்ர்ச்சி, மக்களின் மீதும் எதிரொலிக்கும்.

இதனால் மாநில அல்லது மத்திய அரசு செலவுகளைச் சமாளிக்க சில தந்திரங்களை மேற்கொள்ளும் இது பட்ஜெட் ஆவணத்துக்கு அப்பாற்றப்பட்டது, பட்ஜெட்டுக்குள்ளே வராது.

சுப்பிரமணியம் பேசுகையில் “ பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்டு அரசாங்கம் பெறும் கடன் அரசாங்கக் கணக்குகளில் பிரதிபலிக்காத கடன்கள், இறுதியில் இந்தக் கடன்களை அரசாங்கம்தான் திருப்பிச் செலுத்த வேண்டும், இவை பொதுவாக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களால் எடுக்கப்படுகின்றன.

2019-20ம் ஆண்டு பட்ஜெட்டில், பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்டு பெற்ற அனைத்து கடன்கள் குறித்தவிவரங்களையும் வெளியிடப் போவதாக மத்திய அரசு தெரிவித்தது. அதற்கு ஏற்றார்போல் வெளியிட்டாலும் அது முழுமையாக இல்லை போதுமானதும் இல்லை.

அதாவது எப்போது கடன் வாங்கப்பட்டது, பணம் எவ்வளவு, கடன் பெற்றதிலிருந்துநடந்த சம்பவங்கள், வட்டி வீதம் குறித்த எந்த விவரங்களும் அரசு வெளியிட்ட தகவலில் இல்லை.

மத்திய தலைமைக் கணிக்குத் தணிக்கை அதிகாரி அரசின் நிதி குறித்த அறிக்கையை 2022ம் ஆண்டு தாக்கல் செய்தார். அதில் 1.69 லட்சம் கோடி ரூபாயை பல்வேறு அரசு நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் இருந்தாலும் அங்கும் ஒரு அரசு கட்டுமானத் திட்டத்தில் நிதி முறைகேடு நடந்தது.அது வேடிக்கையான சம்பவம்.

ஜம்மு காஷ்மீரை நிர்வாகம் செய்து வந்தஅப்போதைய நிர்வாகம், போலியான சான்றிதழ்களை வழங்கி, ஒதுக்கப்பட்ட பணத்தை முறைப்படி அந்தந்தபணிகளுக்கு செலவிட்டோம் என்று சான்று வழங்கியது. ஜம்மு காஷ்மீர் உள்கட்டமைப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கும். அந்த நிதியைப்பெற்றுக் கொண்ட ஜம்மு காஷ்மீர் அரசு, போலியான சான்று அளி்த்து, நிதியை முறைப்படி செலவிட்டோம் என்று தெரிவித்தது. ஆனால், முதல் தவணையை ஒப்பந்ததாரருக்கு வழங்கிவிட்ட மாநில நிர்வாகம் அடுத்தடுத்த தவணைகளை ஒப்பந்ததாரருக்கு வழங்கமுடியாமல் தடுமாறியது” எனத் தெரிவித்தார்.

**கூடுதல் கட்டணங்களில் கொள்ளை **

நரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் அப்பட்டமாக மாநிலங்களுக்கு கிடைக்கும் நிதி அளவைக் குறைத்தது. அது மட்டுமல்லாமல் செஸ் மற்றும் சர்சார்ஜ் என்ற புதிய வரியை வதித்து அதை வசூலித்தது. இந்த இரு வரி மூலம் கிடைக்கும் வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தேவையில்லை. இதனால் அவ்வப்போது செஸ் மற்றும் சர்சார்ஜை மட்டும் தங்களின்தேவைக்கு ஏற்றார்போல் உயர்த்திக்கொள்ளும் என சுப்பிரமணியம் தெரிவித்தார்

2015ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெற்ற செஸ் மற்றும் சர்சார்ஜ் விவரங்கள்

Capture1.PNG

2015 முதல் 2023ம் ஆண்டுகளுக்கு இடையே, மொத்த வரி வருவாயில் மத்திய அரசின் செஸ் மற்றும் சர்சார்ஜ் வசூல் 13.49 சதவீதத்தில் இருந்து 17.36 சதவீதமாக உயர்ந்தது. 2021ம் ஆண்டு இது அதிகபட்சமாக 20.48 சதவீதமாக அதிகரித்தது.

2011-12ம் ஆண்டில் மத்திய அரசின் செஸ் மற்றும் சர்சார்ஜ் வசூல் மொத்த வரி வருவாயில் 8.16 சதவீதம் இருந்தது. 2017-18 முதல் 2021-22ம் ஆண்டில் செஸ் மற்றும்சர்சார்ஜ் வசூல் 2.66 லட்சம் கோடிரூபாயில் இருந்து, ரூ.4.99 லட்சம் கோடியாக அதிகரித்தது.

பட்ஜெட் மற்றும் நிர்வாக நம்பகத்தன்மைக்கான மையத்தின் தலைவர் மாலினி சக்ரவர்த்தி, மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வைக் குறைத்து எவ்வாறு மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது பங்கை அதிகரிக்க செய்த தந்திரங்கள் குறித்து எழுதியுள்ளார். அதில் “ 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில், மத்திய அரசு ரூ. 500,000 (USD 7,078) வரையிலான வருமான வரி விகிதத்தை 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்தது.

இதில் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக வருவாய் ஈட்டுவோரிடம் வருமானத்தில் சர்சார்ஜ் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்தது. 2018-19ம் ஆண்டில் பெட்ரோலுக்கான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.9 குறைத்துவிட்டு மறுபுறம் சாலைக்கான செஸ் அதே அளவு உயர்த்தியது மத்திய அரசு.

சுப்பிரமணியம் பேசுகையில் “ ஜிஎஸ்டி வரியை 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தியதிலிருந்து மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு மாநிலங்களுக்கான வரிவருவாய் மூலத்தையே அழித்தது. பல்வேறு ஆய்வறிக்கைகள் வெளியிட்ட அறிக்கையில்கூட ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யாத போதுதான் மாநிலங்களின் வரிவருவாய் உயர்ந்திருந்தது. ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்தபின் வரிவருவாய் குறைந்துவிட்டது.

பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனத்தின் ஆய்வாளர்கள் 2023ம் ஆண்டு ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அதில் 18 மாநிலங்களின் வரி மூலத்தை ஆய்வு செய்ததில் 17 மாநிலங்களின் வரிவருவாய், ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்தபின் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யாதபோது இருந்த அளவைவிட குறைந்துள்ளது. ஆனாலும், மாநிலங்களின் நிதிச்சுதந்திரத்தை குறைக்கவே தொடர்ந்து மத்திய அரசு முயன்று வருகிறது.

15-வது நிதி ஆணையம் தனது பரிந்துரையில், மாநிலங்கள் கடும் நிதி ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும், மக்களைக் கவரும் திட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. 2022ம் ஆண்டு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது, மாநிலங்கள் இலவச கலாச்சாரத்தை எடுத்துள்ளன என சாடினார்” எனத் தெரிவித்தார்.

modi1.jpg

ஆனால், பிரதமர் மோடி அலுவலகத்திலேயே பணியாற்றும் சுப்பிரமணியம் இந்த விஷயத்தில் மோடியின் கருத்தில் இருந்துவேறுபட்டு நிற்கிறார். அவர் கூறுகையில் “ இது சமூக முடிவுகள். அமெரிக்காவில் மக்களுக்கு மருத்துவ சிகிச்சையும், மருத்துவக் காப்பீடும் இலவசம் என்றால் அது இலவசப்பொருட்களாகுமா. இதை ரத்து செய்ய முடியுமா.

இவை சமூக முடிவுகள் என நினைக்கிறேன். இது பொருளாதாரம் சார்ந்த முடிவுகள் அல்ல. உங்களால் பணம் செலுத்த முடியுமா என்பதைப் பொறுத்தே பொருளாதார முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இலவசங்கள் சரியா அல்லது தவறா என நான் கூற முடியாது. இது அரசியல் முடிவு” எனத் தெரிவித்தார்

ஆதாரம்: தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ்

தமிழில்: பிரித்விராஜ்

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்