Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஆந்திராவில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது - 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதியில் தேர்தல்

SAMYUKTHA18-04-2024
ஆந்திராவில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது - 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதியில் தேர்தல்

ஆந்திராவில் 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுகாலை தொடங்கியது. மனு தாக்கலுக்கு 25ம்தேதி கடைசி நாளாகும்.

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வரும் மே 13ம்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜக இணைந்து போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் கட்சி 17 மக்களவை தொகுதியிலும், 144 சட்டசபை தொகுதியிலும் போட்டியிடுகின்றது. ஜனசேனா கட்சி 2 மக்களவை தொகுதியிலும், 21 சட்டசபை தொகுதியிலும் பாஜக 6 மக்களவை தொகுதியிலும், 10 சட்டசபை தொகுதியிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் 24 மக்களவை தொகுதியிலும், 167 சட்டசபை தொகுதியிலும் போட்டியிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 1 மக்களவை தொகுதியும், 8 சட்டசபை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதுதொடர்பாக ஆந்திர மாநில தேர்தல் அதிகாரி முகேஷ்குமார்மீனா கூறியதாவது: ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே 13ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுகாலை தொடங்கியது. இதற்காக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த கலெக்டர் அலுவலகம், மற்றும் ஆர்டிஓ அலுவலகங்களில் மனுக்கள் தாக்கல் செய்யலாம். ஒரு வேட்பாளர் ஏதேனும் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் 100 மீட்டருக்கு வெளியே நிறுத்தப்படுவார்கள். வேட்பாளருடன் 3வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களவைக்கு ₹25,000, சட்டப்பேரவைக்கு ₹.10,000 செலுத்த வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. விண்ணப்பதாரர்கள் 50 சதவீதம் செலுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் முழுமையாக பதிவாகும் வகையில், வேட்புமனு தாக்கல் செய்யும் அறை மற்றும் வேட்பாளர்கள் நுழைவு வாயில்களில் சிசி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பணி நாட்களில் பெறப்படும். பொது விடுமுறை நாட்களில் வேட்புமனு ஏற்கப்படாது. வேட்பாளர் தங்களது வேட்புமனுவை நேரடியாகவோ அல்லது தனது முன்மொழிபவர் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். வேட்பாளர் புதிதாக திறக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை வேட்புமனுவுடன் தங்கள் பெயரில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவிதா செயலி மூலம் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தாலும், வேட்பு மனுக்களின் நகல்களை தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் மற்றும் கட்டணச் செய்திகளும் வேட்பாளரின் கணக்கில் கணக்கிடப்படும். வரும் 25ம்தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும். 26ம்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 29ம்தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். மே 13ம்தேதி காலை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் 4ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜூன் 6ம்தேதி தேர்தல் பணிகள் நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்