Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, ஜெயிலில் கொலை செய்ய சதி; 'ஆம் ஆத்மி" பரபரப்பு குற்றச்சாட்டு

CHENDUR PANDIAN.K19-04-2024
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை, ஜெயிலில் கொலை செய்ய சதி; 'ஆம் ஆத்மி" பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி

டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் ஜெயில் கொலை செய்ய பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான அதிஷி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மதுக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை (ஈ.டி.) வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஈ.டி. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “அர்விந்த் கெஜ்ரிவால் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அப்படி இருந்தும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை அவர் உட்கொள்கிறார். அவர் தினமும் ஆலு பூரி, மாம்பழம், இனிப்பு வகைகளை அதிகம் உட்கொள்கிறார். மருத்துவ அறிக்கையை காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்காக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்” என்றனர்.

உணவு அட்டவணை

 இதையடுத்து நீதிபதி கூறும்போது, "இந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், கெஜ்ரிவாலின் உணவு அட்டவணையும் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கெஜ்ரிவாலை கொலை செய்ய பெரிய அளவில் சதி நடைபெற்று வருவதாக ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் அதிஷி பரபரப்பு புகாரை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவருக்கு வீட்டிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளை கொடுப்பதற்கும் இன்சுலின் ஊசி செலுத்துவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது "கடந்த பல நாட்களாக சிறையில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து வருகிறது. ஆனால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவருக்கு இன்சுலின் செலுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அவரை கொலை செய்வதற்கு தீட்டப்பட்டுள்ள சதி திட்டத்தின் அடிப்படையில் தான் இதுபோன்று அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க மறுக்கப்படுகிறது" என்று அதிஷி கூறினார்.

ஆனால் அவருடைய இந்த குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் உடனடியாக மறுத்தனர். "கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு (300) உட்பட்டு தான் இருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவருக்கு வீட்டிலிருந்து தயாரிக்கப்படும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவருடைய உடல்நிலை சிறை டாக்டர்கள் இருவரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி திகார் ஜெயிலில் 250 பேர் சர்க்கரை நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைவருடைய உடல் நிலையையும் டாக்டர்கள் கவனித்து வருகிறார்கள்" என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மியின் கொலைச் சதி புகார் பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் கிடைக்கவில்லை.

முன்னதாக அமைச்சர் அதிஷி தனது பேட்டியின் போது, "கெஜ்ரிவால் கடுமையான நீரிழிவு நோயாளி. அவருடைய உணவு முறை குறித்து அமலாக்கத்துறை பொய் கூறி வருகிறது.

இன்று அவருடைய உடல் நிலைக்கு மேலும் கேடு விளைவிக்க பாஜக தனது மறைமுக அமைப்பான அமலாக்க துறை மூலம் முயற்சி செய்து அவருடைய வீட்டில் சமைத்த உணவை நிறுத்த முயற்சிக்கிறது.

கெஜ்ரிவால் இனிப்பு தேநீர் அருந்துவதாகவும் இனிப்பு சாப்பிடுவதாகவும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து நீதிமன்றத்திலும் பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டது" என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அவர் கூறும் போது "டாக்டர்கள் பரிந்துரைத்த "எரித்ரிட்டால்' என்ற இனிப்புடன் தயாரிக்கப்படும் தேநீர் மற்றும் இனிப்புகளை சாப்பிட அனுமதிக்கப்பட்டு வருகிறார். அவரது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவர் தினமும் 54 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்கிறார்.

அமலாக்கத் துறையின் இரண்டாவது பொய் என்னவென்றால் கெஜ்ரிவால் தனது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க பழங்களை சாப்பிடுகிறார் என்பதாகும். இதுகுறித்து எந்த ஒரு நீரிழிவு மருத்துவரையும் கலந்து ஆலோசிக்கும்படி அமலாக்கத்துறை மற்றும் பாஜகவிடம் நான் கூற விரும்புகிறேன்" என்றார்.

அறிக்கை கேட்கிறார் கவர்னர்

இந்த நிலையில் கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது இன்சுலின் பெற அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறித்து, உண்மையான மற்றும் விரிவான அறிக்கையை வழங்கும்படி சிறைத்துறை தலைமை இயக்குனருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் (லெப்டினன்ட் கவர்னர்) வி கே சக்சேனா உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

"கெஜ்ரிவால் உடல் நிலை குறித்து வெளியான தகவல்கள் கவலை அளிப்பதாக"வும், "இந்த விவகாரத்தில்அலட்சியம் காட்டினால் பொறுத்துக் கொள்ள முடியாது" என்றும் அவர் உறுதி அளித்து இருக்கிறார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்