Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

இப்படி பேசுறாரு! ராகுல் காந்திக்கு அறிவுரை கூறுங்கள்! பிருந்தா காரத் காட்டம்

PRITHIVIRAJ19-04-2024
இப்படி பேசுறாரு! ராகுல் காந்திக்கு அறிவுரை கூறுங்கள்! பிருந்தா காரத் காட்டம்

கேரள முதல்வர் பினராயி விஜயனை அமலாக்கப்பிரிவு கைது செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி அந்த வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும். ராகுல் காந்திக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவுரை கூற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பியோரோ உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று கண்ணூரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசுகையில் “ கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் இருந்து அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் பாஜகவும், மத்திய விசாரணை அமைப்புகளும் எடுக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

பினராயி விஜயன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது அமலாக்கப்பிரிவு ஏன் விசாரிக்கவில்லை” எனப் பேசியிருந்தார். இந்நிலையில் கொச்சி நகரில் இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றபின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பியோரோ உறுப்பினர் பிருந்தா காரத் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது.

brindh kart.jpg

கேரள முதல்வர் பினராயி விஜயனை அமலாக்கப்பிரிவு கைது செய்ய வேண்டும் என ராகுல் காந்தி பேசியிருப்பது கருணையற்ற பேச்சு, அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. மத்திய விசாரணை அமைப்புகள் குறிப்பாக அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை, சிபிஐ அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாடி வரும்நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது, வெட்கக்கேடானது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது, தேர்தல் நேரத்தில் அமலாக்கப்பிரிவு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடுமையாகக் கண்டித்தது.ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும் மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்தது. காங்கிரஸ் வங்கிக்கணக்குகளை முடக்கியபோதும் மார்க்சிஸ்ட் குரல் கொடுத்தது.

ஒட்டுமொத்த சோனியா காந்தி குடும்பத்தை ஊழல்வாதிகள் என குற்றம்சாட்ட முயன்றபோதும் மார்க்சிஸ்ட் கண்டித்தது. மார்க்சிஸ்ட் கட்சி சில கொள்கைகளை வைத்து அதன்படி செயல்படுகிறது.

pinarayi-vijayan-1463930151.jpg

இந்தியா கூட்டணியும் கூட்டாகச் சேர்ந்து ஹேமேந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்தது. ஆனால், ராகுல் காந்தியோ, கேரள முதல்வர் பினராயி விஜயனை கைது செய்ய அமலாக்கப்பிரிவை அழைக்கிறார்.

ராகுல் காந்தியின் பேச்சு கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைமை உற்றுநோக்க வேண்டும். இந்த தேசத்தில் எதிர்க்கட்சிகளை அழிக்க பாஜக அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி வருகிறது.

பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து தேசத்தைக் காக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த மதிப்புகளை பாதுகாக்கவும் மார்க்சிஸ்ட் இந்தியா கூட்டணியில் சேர்ந்தது.

கேரள முதல்வர் மகள் டி வீணா குறித்த விவகாரத்தில் விசாரணை நடந்த வரும்போது அது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. அதேநேரம் வீணாவுக்கு இயற்கை நீதி, தன்னை பாதுகாக்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது.

கேரள மக்களின் நலனுக்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்றத்தில் இதுவரை குரல் கொடுக்கவில்லை.

இவ்வாறு பிருந்தா காரத் தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்