Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

"பிரதமர் மோடியின் வகுப்புவாத பிளவு பேச்சு" ; "தேர்தல் நடத்தை விதி மீறல்" என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

CHENDUR PANDIAN.K19-04-2024
"பிரதமர் மோடியின் வகுப்புவாத பிளவு பேச்சு" ; "தேர்தல் நடத்தை விதி மீறல்" என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

கோழிக்கோடு

மக்களவைத் தோ்தல் பிரசாரங்களின்போது பிரதமா் மோடியின் வகுப்புவாத பிளவு உள்ளிட்ட பல்வேறு பேச்சுகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உள்ளன என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதுதொடா்பாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

"தோ்தல் பிரசாரங்களில் இந்துக்கள் வணங்கும் ராமபிரானை வைத்து வகுப்புவாத பிளவை கூா்மையாக்கும் நோக்கில் பிரதமா் மோடி பேசியுள்ளாா். அவரின் பல பேச்சுகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளன. அத்தகைய பேச்சுகளை பட்டியலிட்டு தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்துள்ளேன்.

பிரதமா் மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாய் திறக்காமல் மெளனம் காப்பதாக கேரளத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குற்றம் சாட்டுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்ததற்காக முதல் அரசியல் தலைவராக நான் கைது செய்யப்பட்டேன். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னா், காஷ்மீரில் அரசியல் தலைவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘ஹேபியஸ் காா்பஸ்’ மனு தாக்கல் செய்தது. தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே முதன்முதலாக வழக்கு தொடுத்தது.

இதுபோல மேலும் பல விவகாரங்களில் பாஜகவுக்கு எதிா்ப்பு தெரிவித்ததில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் இருந்தது. இத்தகைய சந்தா்ப்பங்களில் கேரளத்தின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எங்கிருந்தது?" என்று அவர் கேள்வி எழுப்பினாா்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடகரை மக்களவை தொகுதி வேட்பாளர் கே கே சைலஜாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறியிருக்கிறார்.

"அவருக்கு எதிரான இந்த பிரசாரம் தீவிரமானது; ஆபாசமானது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றது இது காட்டுகிறது" என்றும் யெச்சூரி மேலும் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்