Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

டெல்லி எம்எல்ஏ அமானதுல்லா கான் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கண்டனம்

PRIYA19-04-2024
டெல்லி எம்எல்ஏ அமானதுல்லா கான் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கண்டனம்

வக்ஃபு வாரியம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமானதுல்லாவை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி வக்ஃபு வாரியத்தில் வேலை வாங்கித் தருவதற்காக சட்டத்துக்கு புறம்பாக பணத்தைப் பெற்றதாகவும் அதைக் கொண்டு அவருக்கு நெருக்கமானவர்கள் பெயரில் அசையா சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி விசாரணை நடத்தி வருகிறது.

அமானதுல்லா மீது சிபிஐ பதிவு செய்த வழக்கு மற்றும் டெல்லி போலீசில் பதியப்பட்ட 3 புகார்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்த தனது விசாரணையைத் தொடங்கியது.

அமலாக்கத்துறையின் விசாரணைக்காக நேற்று அவர் ஆஜரான நிலையில், 13 மணி நேர விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு உள்ளார். முன்னதாக முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி அரசை பலவீனப்படுத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுவதாக அவர் கூறினார்.

அவர் கூறுகையில், “உங்களுடைய சர்வாதிகாரம் விரைவில் முடிவுக்கு வரும். இந்த விவகாரம் 2016ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. நீதிமன்றமே, உங்களிடம் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறிவிட்டது. அப்படி இருந்தும் அவரைக் கைது செய்து இருக்கிறார்கள். டெல்லி அரசையும் கட்சியையும் அழிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட சதி இது. அமானத்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஆம் ஆத்மி கட்சி துணையாக நிற்கும். ” என்றார்.

ஆம் ஆத்மி தலைவர் அதிஷியும் இந்த கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அமானத்துல்லா கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இது முற்றிலும் பொய்யான வழக்கு. அமலாக்கத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை. குற்றச்சாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது. ஆம் ஆத்மிக்கு எதிராக செய்யப்பட்ட மற்றொரு சதி இது. பாஜகவுக்கும் அவர்களின் தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடிக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், ஆம் ஆத்மி கட்சியில் இருக்கும் அனைவரையும் கைது செய்தாலும், டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலோடு நிற்பார்கள், அவருக்கு வாக்களிப்பார்கள்.”, என்றார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்