Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

திமுக ஒன்றிய செயலாளர் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல் - சேலம் அருகே மறியலால் பரபரப்பு

SAMYUKTHA19-04-2024
திமுக ஒன்றிய செயலாளர் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல் - சேலம் அருகே மறியலால் பரபரப்பு

மேச்சேரி அருகே கள்ள ஓட்டு போடுவதை தடுக்க சென்ற திமுக ஒன்றிய செயலாளர் கார் மீது, பாமகவினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியம் புக்கம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிடுவதற்காக, மேச்சேரி ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாச பெருமாள், தனது காரில் இன்று மாலை சென்றுள்ளார். அந்த வாக்குச்சாவடியில் ஏற்கனவே அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த ஒருவர் மீண்டும், வாக்களிக்க வந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாச பெருமாள், வாக்குப்பதிவு அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டதுடன், கள்ள வாக்கு அளிப்பதை தடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர், வேறு பகுதிக்கு செல்ல சீனிவாச பெருமாள் காரில் வந்த போது, பாமகவை சேர்ந்த கார்த்தி, கண்ணன், தீனா, மற்றொரு கண்ணன் மற்றும் ஏராளமானோர், பெரிய கல்லை தூக்கி வந்து காரின் முன் பகுதியிலும், பின் பகுதியில் வீசி தாக்கினர். இதில் கார் சேதமடைந்தது.

அப்போது, சீனிவாச பெருமாள், காரில் இருந்து இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திமுக ஒன்றிய செயலாளர் வந்த காரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், புக்கம்பட்டி - மேச்சேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து ஏராளமான போலீசார் புக்கம்பட்டிக்கு வரவழைக்கப்பட்டனர். கள்ள ஓட்டு போட்டவர்கள் மீதும், கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். பிறகு மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள் சமாதானப் படுத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இதேபோல், மேச்சேரி அருகே உள்ள பானாபுரத்தில் பஸ் நிறுத்தத்தில், கோல்காரனூர் பகுதி பாமகவை சேர்ந்த துரைராஜ், செங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு இயந்திரத்தை மாற்றி வைக்கும்படி, அலுவலர்களிடம் தெரிவித்தார். ஆனால், அங்கிருந்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வெளியே வந்த துரைராஜ், செங்காட்டூர் பிரிவு சாலையில் நின்றிருந்த திமுகவினரிடம், மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தாராபுரம் முத்தாம் பட்டியை சேர்ந்த கைலாஷ் (53) என்பவரை, துரை ராஜ் மற்றும் அவருடன் வந்த பாமகவினர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த கைலாஷ், மேட்டூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் மேச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்