Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் 62 பேர் வாக்களிப்பு

SAMYUKTHA19-04-2024
வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு - அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் 62 பேர் வாக்களிப்பு

வேங்கவையல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பால் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 62 பேர் மாலையில் வாக்களித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 15 மாதங்களாகும் நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை கண்டறியப்படாததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். அதேபோல் இறையூர் கிராமத்தை சேர்ந்த இரு வேறு சமூகத்தை சேர்ந்த மக்களும் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் வேங்கைவயல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வேங்கைவயல் பகுதியில் ஒட்டு மொத்தமாக உள்ள 59 வாக்காளர்களும் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லாமல் தேர்தலை புறக்கணிப்பு செய்து, வாயில் கருப்பு துணி கட்டியும் கருப்பு துண்டு அணிந்து கருப்பு பேட்ச் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் இறையூர் கிராமத்தில் 482வாக்காளர்கள் உள்ள நிலையில் அதில் 8 பேர் மட்டுமே வேங்கை வயல் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்கு பதிவு செய்தனர். வேங்கைவயல் இறையூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் உள்ள 561 வாக்காளர்களில், 8 பேர் மட்டுமே வாக்கை பதிவு செய்தனர். இதனால் அங்கு வாக்குப்பதிவுக்காக பணியில் உள்ள அலுவலர்கள் வாக்கு சாவடி முகவர்கள், வாக்காளர்களே இல்லாமல் காற்று வாங்கியது. இதையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் திருச்சி டிஆர்ஓ ராஜலெட்சுமி, கொளத்தூர் தாசில்தார் கவியரசு ஆகியோர் நேரில் சென்று வேங்கைவயல் மக்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்த மக்கள் மாலை 5.40 மணியளவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். இதில் 62 பேர் மட்டுமே வாக்களித்தனர். இறையூரை சேர்ந்தவர்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்