Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

பல்வேறு மாவட்டங்களில் மின்னணு இயந்திரத்தில் கோளாறு - நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளர்கள்

SAMYUKTHA19-04-2024
பல்வேறு மாவட்டங்களில் மின்னணு இயந்திரத்தில் கோளாறு - நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.ேக.புதூர் விநாயகர் கோயில் வீதி, பெருமாள் சாமி நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இன்று காலை 7 மணிக்கு பழுது ஏற்பட்டது. இதனால், அங்கு சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் அவை சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் கரியமலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கபப்ட்டுள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் அவை சரி செய்யப்பட்ட உடன் வழக்கம்ப்போல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் சுமார் 1 மணி நேரம் அங்கு தாமதம் ஏற்பட்டது. வேலூர் மக்களவை தொகுதில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கஸ்பா ஏ அரசு உயர்நிலைபள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மற்றும் நாச்சார்குப்பத்தில் 2 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு சிறிது நேர காலதாமதத்திற்கு பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது. இதேபோல், ஆம்பூர் அடுத்த பெரிய வெங்கடசமுத்திரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக வேறு இயந்திரம் கொண்டு வரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. அத்திமாகுலப்பள்ளி பகுதியில் இருந்த வாக்குச்சாவடியில் ஏற்பட்ட இயந்திர கோளாறை ஒரு மணிநேரத்தில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் சீரமைக்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. விண்ணமங்கலம் இந்து நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் காலை 8.30 மணியளவில் திடீரென விவிபேட் இயந்திரம் பழுதானது. இதையடுத்து பழுது சீரமைக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே வாக்குப்பதிவு தொடங்கியது. பின்னர் காலை 11.30 மணியளவில் விவிபேட் இயந்திரத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டது. தொடர்ந்து டெக்னிஷியன்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 2 மணிநேரம் போராடியும் சீரமைக்க முடியவில்லை. இதனால் வேறு இயந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அங்கு 2 மணிநேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நேற்று நடந்த கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்குப்பதிவு செய்யும் இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டன. இதனால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவானது 7.20 மணியளவில் தொடங்கியது. இதேபோல் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 9.20 மணிக்கு வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டதை தொடர்ந்து 9.45 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வண்ணஞ்சூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மதியம் 12.40 மணியளவில் வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனையடுத்து மாற்று இயந்திரம் பொருத்திய பிறகு மதியம் 1.10 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மகளிர் பள்ளி வாக்குச்சாவடி, தூத்தூர் மீனவ கிராம மக்கள் வாக்களிக்க பயஸ் லெவன் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு சாவடி, சூரியகோடு தனியார் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி, வள்ளவிளை மீனவ கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி, காட்டாத்துறை, திருவட்டார், பேச்சிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி 5வது வாக்குச்சவடி, பொன்மனை பேரூராட்சி அலுவலகத்தில் 44வது வாக்குசாவடி மற்றும் செருப்பாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 55வது வாக்குசாவடி, அண்டூர் அரசு தொடக்கப் பள்ளி, உண்ணியூர்கோணம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடிகளில் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அரைமணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் சிறு கோளாறு காரணமாக குன்னங்காடு, மணக்குடி, திருவட்டார், இலந்தையடி, பேச்சிப்பாறை, பூதப்பாண்டி, வெள்ளிச்சந்தை ஆகிய இடங்களில் உள்ள வாக்குசாவடிகள் உட்பட மாவட்டம் முழுவதும் 26 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் விளாச்சேரி, மதுரை சிங்கராயர் காலனி மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் விவிபேட் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு அரை மணிநேரம் தாமதமானது. விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி, தடங்கம் அரசு நடுநிலைப்பள்ளி, செவல்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி, விருதுநகர் டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி, கான்சாபுரம் அரசு பள்ளி உள்பட 20க்கும் மேற்பட்ட வாக்குச்சாடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதனால் கையிருப்பில் இருந்த மாற்று இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கான்சாபுரத்தில் பழுதான இயந்திரம் 40 நிமிடங்களுக்கு பின் சரி செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 57ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் புதிய இயந்திரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் தேனி தொகுதி கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் விவிபேட் இயந்திரம் சரியாக இயங்காமல் இருந்தது. 20 நிமிடங்களுக்கு பின் விவிபேட் சரிசெய்யப்பட்டு வாக்களிப்பு நடைபெற்றது. தேனி நகர் பொம்மையக்கவுண்டன்பட்டியில் உள்ள கள்ளர் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பின் மாற்று இயந்திரம் கொண்டு வந்து வாக்குப்பதிவு செய்யப்பட்டது. தேனி நகர் கொண்டு ராஜா பள்ளியிலும் ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. உடனடியாக மாற்றப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரியகுளம் அருகே பங்களாபட்டியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.

தேனி தொகுதி செக்கானூரணி அருகே உள்ள மேலக்கால் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக காலதாதமம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேர தாமதத்துடன் வாக்குப்பதிவு நடந்தது. மேலும் விருதுநகர் தொகுதி திருமங்கலம் அரசு பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் ஒரு சில வாக்கு இயந்திரங்களை அதிகாரிகள் சரியாக பொருத்தாத நிலையில் தாமதம் ஏற்பட்டது. ராமேஸ்வரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 313வது மையத்தில் காலையில் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. இதேபோல் ஓலைக்குடா வாக்குச்சாவடியிலும் இயந்திர கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. பாம்பன் அந்தோணியார்புரம் 266வது பூத்தில் வாக்கு இயந்திரம் அடுத்தடுத்து மூன்று முறை பழுதானது. இதனால் வாக்கு செலுத்த முடியாமல் அப்பகுதி வாக்காளர்கள் பல மணிநேரம் காத்துக் கிடந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பே வாக்குப்பதிவு இயந்திரம் திடீர் பழுதானது. இதையடுத்து வேறு ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதுவும் வேலை செய்யாததால், மற்றொரு இயந்திரம் வரவழைக்கப்பட்டு காலை 8.15 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வேதாரண்யம் வடமலைரஸ்தா வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்க இருந்த நிலையில் இயந்திரம் பழுதானது. இதையடுத்து இயந்திரம் பழுது சரி செய்யப்பட்டு 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பரப்பனாமேடு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சானூரபட்டி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பூத் எண் 291ல் வாக்குப்பதிவு பழுதானதால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. தஞ்சை மக்களவை தொகுதிக்குட்பட்ட பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குக்சாவடியில் பூத் எண் 242ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் 22 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு துவங்கியபோது பழுது ஏற்பட்டதால் 7.40 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவில்லை. இதையடுத்து இயந்திரம் பழுது சரி செய்யப்பட்டு 40 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. மண்ணச்சநல்லூர் தீராம்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரம் பழுதானது. இதையடுத்து 3 இயந்திரங்கள் மாற்றியும் வேலை செய்யாததால் காலை 9 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவில்லை. மருங்காபுரி முத்தாழ்வார்பட்டி வாக்குச்சாவடி மையம், மணப்பாறை பெருமாம்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. பூலாங்குளத்துப்பட்டி வாக்குச்சாவடியில் 253வது பூத்தில் விவிபேட் பழுதானது. இதனால் ஒரு மணி நேரம் தாமதத்துக்கு பின் வாக்குப்பதிவு துவங்கியது. வையம்பட்டி ஒன்றியம் புதுவாடி புதூர் வாக்குச்சாவடி மையத்தில் 90வது பூத் மற்றும் அயன்ரெட்டியப்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திருமலைராயபுரம் அரசு பள்ளி வாக்குச்சாவடி பூத் எண் 178ல் காலை 7.50 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுதானது. தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு இயந்திரம் பழுது சரி செய்யப்பட்டு 7.40 மணிக்கு துவங்கியது. திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் பள்ளி 214வது பூத்தில் இயந்திர கோளாறால் காலை 9 மணி வரை வாக்குப்பதிவு துவங்கவில்லை. இதனால் கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு வழங்க நேரம் வழங்க வேண்டுமென அரசியல் கட்சியினர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். திருச்சி மாஜி ராணுவ காலனி தங்கேஸ்வரி நகர் அரசு பள்ளி வாக்குசாவடியில் இயந்திரம் பழுதானதால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு தடை பட்டது. கே.கே.நகர் சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் காலை 10.15 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு இயந்திரம் சரி செய்யப்பட்டது. இதனால் 45 நிமிடங்களுக்கு பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

விழுப்புரம் மகாராஜபுரம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பம், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட 45 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து சீரமைக்கப்பட்டும், சில இடங்களில் மாற்று இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு 30 நிமிடம் காலதாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது. இந்த வாக்குசாவடிகளில் வாக்குபதிவு முடிவடையும்போது கூடுதல் நேர அவகாசம் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி அனுமகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு, 45 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதே போல், வெப்பாலம்பட்டி ஊராட்சி தொப்பிடிகுப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றில், இயந்திரம் பழுது காரணமாக 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அய்யந்திருமாளிகையில், மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 13வது வாக்குச்சாவடியில், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தொடர்ந்து அதில் பதிவான வாக்குகளை நீக்க முடியாமல் போனது. இதையடுத்து இயந்திரத்தில் ஏற்பட்ட குளறுபடி சரி செய்யப்பட்டது. இதனால், அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்க அரை மணிநேரத்திற்கும் மேலாக தாமதம் ஆனது. இதேபோல், சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த 4வது வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. சுமார் அரை மணிநேரத்திற்கு பிறகு அந்த பழுது சரிசெய்யப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது. கருப்பூர் பேரூராட்சி 15வது வார்டில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், அரை மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடந்தது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தடங்கம் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 10 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதுமே பல்வேறு வாக்குசாவடிகளில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பழுதாகின. பின்னர் அவை அடுத்தடுத்து சரி செய்யப்பட்டன. இருப்பினும் இந்த பழுது காரணமாக 20 முதல் 45 நிமிடங்கள் வரை பல்வேறு வாக்குபதிவு மையங்களில் வாக்குபதிவு தாமதமாக நடந்தது. தூத்துக்குடி தொகுதி முழுவதும் நேற்று 17 கண்ட்ரோல் யூனிட்களும், 15 இவிஎம்களும், 38 இடங்களில் விவிபேட் யூனிட்களும் பழுதாகின. இதனால் வாக்குபதிவில் தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். இதேபோல் நெல்லை மாவட்டத்தில் விகேபுரம் அருகே சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகம்பட்டி கோபாலன் பள்ளியில் காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதையடுத்து இயந்திரம் சரி செய்யப்பட்டு காலை 8 மணிக்கு வாக்களிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. களக்காடு கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 6 மணிக்கு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவுக்கான பணிகள் தொடங்கியது. ஆனால் பேட்டரிகள் கோளாறால் மிஷின் இயங்கவில்லை. பின்னர் அது சரி செய்யப்பட்டது. களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 45ல், 72 ஓட்டுகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு, 2 மணி நேரத்திற்கு பின் வாக்குப்பதிவு மீண்டும் துவங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதியில் உள்ள செய்யாறு தொகுதியில் விண்ணவாடி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் 180ல் வாக்குப்பதிவு தொடங்கியதும் விவிபேட் பழுதானது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டு 1 மணி நேரம் 10 நிமிடங்கள் காலதாமதமாக வாக்குப்பதிவு நடந்தது. அதேபோல் பைங்கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி வாக்குசாவடி மையத்தில் மாதிரி வாக்குப்பதிவின் போது பழுது ஏற்பட்டது. உடனே பழுது சீரமைக்கப்பட்டு வாக்குபதிவு தொடங்கியது. செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி வாக்குசாவடியில் இயந்திரத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக 25 நிமிடம் கால தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

செய்யாறு ஆர்சிஎம் பள்ளி வாக்குச்சாவடி எண் 184ல் ஏஜென்ட்டுகள் தாமதமாக வந்ததாலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் வைப்பதில் ஏற்பட்ட குளறுபடி கோளாறு காரணமாக 25 நிமிடம் கால தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தளரபாடி, ராமகிருஷ்ணாபுரம், பாப்பாந்தாங்கல், நாட்டேரி கிராமங்களில் உள்ள வாக்குசாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிறுசிறு பழுது ஏற்பட்டது. இவை உடனடியாக சீரமைக்கப்பட்டு சுமார் 20 நிமிடங்கள் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. 9.30 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் 2.30 மணி நேரம் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய முடியாமல் காத்திருந்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்