Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குளறுபடி - கார்த்தி சிதம்பரம் புகார்

SAMYUKTHA19-04-2024
வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குளறுபடி - கார்த்தி சிதம்பரம் புகார்

சிவகங்கை தொகுதியில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்ததால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மானகிரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வாக்களித்த பின் நிருபர்களிடம் கூறியதாவது: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் முதலில் வைக்க வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரத்தை இரண்டாவதாகவும், இரண்டாவது இயந்திரத்தை முதலாவதாகவும் வைத்ததால் பெரிய அளவில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் முதல் இயந்திரத்தில் முதலாவதாக உள்ள எனக்கு வாக்களிப்பதற்கு பதிலாக இரண்டாவது இயந்திரத்தில் உள்ள சுயேட்சை வேட்பாளருக்கு மக்கள் தவறுதலாக வாக்களித்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர், கலெக்டரிடம் புகாரளித்து உள்ளோம். அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதுமே பல்வேறு வாக்குசாவடிகளில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பழுதாகின. பின்னர் அவை அடுத்தடுத்து சரி செய்யப்பட்டன. இருப்பினும் இந்த பழுது காரணமாக 20 முதல் 45 நிமிடங்கள் வரை பல்வேறு வாக்குபதிவு மையங்களில் வாக்குபதிவு தாமதமாக நடந்தது. தூத்துக்குடி தொகுதி முழுவதும் நேற்று 17 கண்ட்ரோல் யூனிட்களும், 15 இவிஎம்களும், 38 இடங்களில் விவிபேட் யூனிட்களும் பழுதாகின. இதனால் வாக்குபதிவில் தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், நெல்லை மாவட்டத்தில் விகேபுரம் அருகே சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகம்பட்டி கோபாலன் பள்ளியில் காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதனால் வாக்காளர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு வாக்களிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. களக்காடு கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 6 மணிக்கு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவுக்கான பணிகள் தொடங்கியது. ஆனால் பேட்டரிகள் கோளாறால் மிஷின் இயங்கவில்லை. இதனால் மாதிரி வாக்குப்பதிவு பணிகள் தாமதமானது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாற்று பேட்டரிகள் வரவழைத்து மிஷினை இயக்கினர். அதன் பின் வாக்குப்பதிவு தொடங்கியது. களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 45ல், 72 ஓட்டுகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு, 2 மணி நேரத்திற்கு பின் வாக்குப்பதிவு மீண்டும் துவங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதியில் உள்ள செய்யாறு தொகுதியில் விண்ணவாடி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் 180ல் வாக்குப்பதிவு தொடங்கியதும் விவிபேட் பழுதானது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் பொறியாளர்கள் பழுதானதை பார்வையிட்டனர். பின்னர் மாற்று விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டு 1 மணி நேரம் 10 நிமிடங்கள் காலதாமதமாக வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது. அதேபோல் பைங்கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி வாக்குசாவடி மையத்தில் மாதிரி வாக்குப்பதிவின் போது பழுது ஏற்பட்டது. உடனே பழுது சீரமைக்கப்பட்டு வாக்குபதிவு தொடங்கியது. செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி வாக்குசாவடி மையம் 200ல் இயந்திரத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக 25 நிமிடம் கால தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. செய்யாறு ஆர்சிஎம் பள்ளி வாக்குச்சாவடி எண் 184ல் ஏஜென்ட்டுகள் தாமதமாக வந்ததாலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் வைப்பதில் ஏற்பட்ட குளறுபடி கோளாறு காரணமாக 25 நிமிடம் கால தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தளரபாடி, ராமகிருஷ்ணாபுரம், பாப்பாந்தாங்கல், நாட்டேரி கிராமங்களில் உள்ள வாக்குசாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிறுசிறு பழுது ஏற்பட்டது. இவை உடனடியாக சீரமைக்கப்பட்டு சுமார் 20 நிமிடங்கள் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் மாலை வரையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது பிற்பகல் 1 மணி முதல் 3.00 மணி வரையில் வாக்குப்பதிவு வெயிலின் காரணமாக சற்று மந்தமாக இருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவ படையினரும் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். மிகவும் பதற்றுமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமராவும் அமைக்கப்பட்டிருந்தது. செய்யாறு டிஎஸ்பி சின்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் ஜீவராஜ் மணிகண்டன், கோகுல்ராஜ், லதா ஆகியோர் தொகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செய்யாறு தொகுதியில் மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 10 கிராமங்களில் வாக்காளர்கள் எந்தவித பதற்றமும் இன்றி வாக்குப்பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இரண்டு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் கமுதி அருகே வில்லனேந்தல், கடலாடி அருகே ஆப்பனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர்களில் வரிசை எண்படி முதலில் இருக்க வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டாவது இடத்திலும், இரண்டாவது இடத்தில் இருக்க வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரம் முதல் இடத்திலும் இருந்தது. வாக்களிக்க வந்த திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக இயந்திரங்கள் வரிசை எண்கள்படி முறையாக மாற்றி வைக்கப்பட்டன.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்