Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

பா.ஜ.க.வை விட மிகவும் ஆபத்தானவர், நிதிஷ்குமார்; காங்கிரஸ் விமர்சனம்

CHENDUR PANDIAN.K20-04-2024
பா.ஜ.க.வை விட மிகவும் ஆபத்தானவர், நிதிஷ்குமார்; காங்கிரஸ் விமர்சனம்

பாட்னா

பாஜகவை விட மிகவும் ஆபத்தானவர் நிதிஷ்குமார் என்று விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஏனென்றால் அவருக்கு நிலையான கொள்கை எதுவும் கிடையாது என்று தாக்குதல் தொடுத்தார்.

பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் இது பற்றி கூறியதாவது:-

"நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் எந்த விதத்திலும் பங்கு பெறாத ஆர் எஸ் எஸ் கொள்கையை பாஜக செயல்படுத்த விரும்புகிறது. தற்போதைய தேர்தல், ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன அமைப்பை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. இதில் நாம் தோல்வி அடைந்தால் நமது வருங்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள்.

நமது ஆர் ஜே டி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை சாச்சா (மாமா) என்று அழைப்பவர். அப்படிப்பட்ட நிதிஷ் குமார் செய்த துரோகத்தை குறித்தும் பலமுறை தேஜஸ்வியாதவ் கூறியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை விட மிகவும் மோசமானவர் நிதிஷ்குமார். ஏனென்றால் அவருக்கு நிலையான கொள்கை எதுவும் கிடையாது. ஆட்சியில் நீடிப்பது மட்டுமே அவருடைய குறிக்கோள்.

தனது கட்சியில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் காட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி வந்தவர் நிதீஷ் குமார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு தேசிய அளவில் இந்தியா கூட்டணி அமைவதற்கு முதலில் அவர் உதவியாக இருந்தார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து விட்டார்.

பீகார் அரசின் இரட்டை எஞ்சின் அரசு அடிக்கடி விபத்துகளை சந்திக்கிறது. ஏனென்றால் அந்த கூட்டணி நிலையற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டது.

கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டி வருகிறார். எங்களுடைய தலைவர்கள் இந்திரா காந்தி ராஜீவ் காந்தி போன்றவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

அவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை மேம்படுத்த பாடுபட்டதுதான் இதற்கு காரணம். பிரதமர் மோடியின் 'அச்சா தின்' (நல்ல நாட்கள்) என்ன ஆனது என்று மக்கள் அவரை கேட்க வேண்டும்.

அவர் சொன்னது போல் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவில்லை. வெளிநாடுகளில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வந்து அனைவருக்கும் ரூ. 15 லட்சம் தருவதாக அவர் அளித்த வாக்குறுதி என்ன ஆனது? பெட்ரோல் சமையல் எரிவாயு விலை விண்ணை முட்டுகிறது. இதுவரை இல்லாத அளவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சபட்சத்தில் உள்ளது".

இவ்வாறு கார்கே கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்