Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

ஆணவப் படுகொலையில் கொல்லப்பட்ட கணவன்... பிரிவு துயரால் 2 மாதத்தில் மனைவியும் தற்கொலை

VASUKI RAVICHANDHRAN23-04-2024
ஆணவப் படுகொலையில் கொல்லப்பட்ட கணவன்... பிரிவு துயரால் 2 மாதத்தில் மனைவியும் தற்கொலை

சென்னை பள்ளிக்கரணை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பிரவீன் - ஷர்மிளா தம்பதியராக வாழ்ந்து வந்த நிலையில், திருமணமான 4 மாதங்களுக்கு பிறகு பிரவீனை ஷர்மிளாவின் சகோதரர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து படுகொலை செய்தனர். இந்த கொலை செய்த செய்யப்பட்ட சம்பவத்தில், காதல் கணவரை பிரிந்து துயரில் வாழ்ந்த ஷர்மிளா இரண்டே மாதத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் நகர் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சாய் கணேஷ் நகரைச் சேர்ந்த ஷர்மிளா (21) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஷர்மிளா தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு, ஷர்மிளா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி, இருவரும் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதால் ஷர்மிளா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், பிரவீணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி இரவு, மதுபான கடை அருகே, ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் உட்பட ஒரு கும்பல், பிரவீனை சூழ்ந்து கொண்டு வெட்டி சாய்த்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் பள்ளிக்கரணை போலீசார் இந்த ஆவண கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் உட்பட ஸ்டீபன், விஷ்ணுராஜ், ஜோதி லிங்கம், ஸ்ரீராம் ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி, ஆணவ படுகொலை, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிரவீன் இழந்து தனிமையில் வாழ்ந்துவந்த ஷர்மிளா கணவன் இறந்த 2 மாதங்களில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடந்த 14 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சர்மிளா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, அதன்படி வீட்டில் உள்ள ஃபேன் கொக்கியில், சுடிதார் துப்பட்டாவால், தூக்கிட்டுள்ளார். இதனைக்கணட அவரை உடனடியாக காப்பாற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து சர்மிளாவை மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த சர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கரணை போலீசார், மருத்துவமனை தகவலின் பேரில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று, ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

பிரவீன் தனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்த போதே, போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆவண படுகொலையை தடுத்திருக்கலாம். மேலும், பிரவீன் உயிரிழப்பிற்கு பிறகு ஷர்மிளாவிற்கு உரிய மருத்துவ ஆலோசனைகளை அரசு வழங்கியிருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது

குடும்பத்தின் ஆதரவு இல்லாத ஷர்மிளா தனிமையில், தனது கணவரை நினைத்து வருந்தியதால், அந்த விரக்தியின் காரணமாகவே அவர் இம்முடிவை எடுத்துள்ளார். அவரின் இத்தகைய முடிவிற்கு குடும்பத்தினரும், அரசும் முழுக்க காரணமாக அமைகிறது. குற்றச்சம்பவங்களுக்கு நமது நாட்டில் தண்டனைகள் கடுமையாக இல்லாததே இதற்கு காரணமாக அமைகிறது என்று குற்றச்சாட்டுகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. காவல்துறையின் அலட்சியத்தால் இரண்டு உயிர்கள் பலியான நிலையில், இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் போலீசார் ஷர்மிளாவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ஷர்மிளாவின் டைரியை கைப்பற்றினர். இதில் ஷர்மிளா கடைசியாக இறப்பதற்கு முன் உருக்கமாக எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. அதில் என்னால் என் பிரவீன் இல்லாமல் இருக்க முடியல. நான் சாகப் போறேன். என் சாவிற்கு காரணம் துரைக்குமார், சரளா, நரேஷ், தினேஷ். பிரவினை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. அவன்தான் எனக்கெல்லாம். அவன் தான் வேணும். நான் பிரவீன் கிட்ட போறேன். பிரவீன் எங்க போனாலும் நான் போவேன். இப்போ அவனை சாகடிச்சுட்டாங்க, அவன் இல்லாத இந்த லைப்பும் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன் என உருக்கமாக அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். இந்த தற்கொலை கடிதத்தை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரவீன் - ஷர்மிளாவை போன்று தமிழகத்தில் ஏராளமான சாதிமறுப்பு திருமணங்கள் நடைபெற்றுள்ளது. அதில் சில திருமணங்களில் சாதியை காரணம் காட்டி காதலர்களின் உறவினர்கள் அவர்களை கொல்லும் அளவுக்கு போகின்றனர். அப்படி பல உயிர்கள் இங்கு பலியாகியுள்ளது. சிலர் தங்களது குடும்பத்தினரை சம்மதிக்க வைத்து இன்று வரை ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். பலியான உயிர்களுக்கு காரணமாக அமைந்தவர்க்ளுக்கு கடுமையான தண்டணை கிடைத்திருந்தால், இப்படி கொலை சம்பவங்கள் அரங்கேறுவது குறையும் என்பதே சாமானியர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிரவீன் - ஷர்மிளா வழக்கிலாவது, விரைந்து விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்