Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மத துவேஷ பேச்சுகள்: பிரதமரை கண்டித்த ஜெயக்குமார்

LENIN DEVARAJAN23-04-2024
மத துவேஷ பேச்சுகள்: பிரதமரை கண்டித்த ஜெயக்குமார்

”அதிமுகவை பொறுத்தவரை மத துவேஷ பேச்சுகள் மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது. இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்”, என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டம் முடிந்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்களிக்க முடியாதவர்கள் எத்தனை பேர்? வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்து வாக்குச்சாவடிக்குள் போனால் அங்கு அவரது பெயர்கள் இல்லை. அது எத்தனை பேர்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டும். வாக்காளார் பட்டியலில் இதுபோன்ற குளறுபடிகள் இதற்கு முன்பு நடைபெற்றது இல்லை. ஒட்டுமொத்தமாக சொதப்பி வைத்திருக்கிறார்கள். தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் வெளியிடுவதில் ஏற்பட்ட குளறுபடியால் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கேள்வி: பிரதமரின் மத துவேஷ பேச்சு குறித்து உங்கள் கருத்து. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கும் கண்டனம் என்ற வார்த்தை இல்லை.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மத துவேஷ பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும். வெறுப்பு அரசியல் கூடாது. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு. பிரதமர் அனைவருக்குமானவர். சிறுபான்மையினர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தனிமைப்படுத்தும் விதமாகவும் பேசுவதை ஜனநாயகவாதிகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டன அறிக்கையாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை மத துவேஷ பேச்சுகள் மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது. இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

கேள்வி - அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து.

”அது கடிதம் இல்லை. வெற்று காகிதம். அதை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள்”, இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்