Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

”திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் புழக்கம் சகஜமாகிவிட்டது” – அண்ணாமலை கண்டனம்

LENIN DEVARAJAN23-04-2024
”திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் புழக்கம் சகஜமாகிவிட்டது” – அண்ணாமலை கண்டனம்

மதுரையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை தாக்கும் வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது ’எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”முன்னெப்போதும் இல்லாத அளவில் திமுக ஆட்சியில் போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக போதைப்பொருட்கள் புழக்கம் தலைவிரித்தாடுகிறது. மதுவில் தொடங்கி உயர்ரக போதை வஸ்துகளுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாவதாக தினமும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. போதைப்பொருட்கள் புழக்கத்தை போலீசார் தடுக்க தவறியதால் தான் தமிழகம் எங்கும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கத்தை திமுக அரசு தடுக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் அதிமுகவின் மக்களவை தேர்தல் பரப்புரைகளில் காணமுடிந்தது.

தஞ்சை மாவட்டம், குடந்தையில் இளைஞர்கள் சிலர் நடுரோட்டில் பைக்கை நிறுத்தி இடையூறில் ஈடுபட்டதால் தட்டிகேட்ட அரசு பஸ் டிரைவரை அந்த மர்ம கும்பல் கடுமையாக தாக்கி உதைத்து கீழே தள்ளிய சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரலானது. அதேபோல், சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் போலீசாரை கல்லால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை ஒத்தகடை பகுதியில் பைக்கில் சென்ற கான் முகமது என்பவரை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த கான் முகமது மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். இதுகுறித்து 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் வலைவீசி தேடுகிறார்கள்.

இந்நிலையில், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் கான் முகமதை தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ’எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் போதைப்பொருட்கள் புழக்கம் சகஜமாகிவிட்டது. இதன் விளைவு தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம். கடந்த சில நாட்களில் கஞ்சா போதையில் நடக்கும் 4-வது குற்றச் சம்பவம் இது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போதாவது விழிப்பாரா?”என குறிப்பிட்டுள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்