Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

பிரதமர் மோடி மக்களிடம் சொல்லாதவை - பட்டியலிட்ட ஜெய்ராம் ரமேஷ்

PRIYA23-04-2024
பிரதமர் மோடி மக்களிடம் சொல்லாதவை - பட்டியலிட்ட ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடி, உரைகளின் போது மக்களிடம் எப்போதும் சில வற்றைப் பற்றி பேசுவதே இல்லை என்று கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அவற்றைப் பட்டியலிட்டு உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு பற்றியும், தேர்தல் ஆணையம் அதற்கு நடவடிக்கை எடுக்காததற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேசும் மோடிக்கு எதிராக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் மேடை மேடையாக பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மக்களிடம் சொல்லாத விசயங்கள் எனக் கூறி, சில தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: –

பிரதமர், இவற்றைப் பற்றி எப்போதும் உங்களிடம் சொல்ல மாட்டார்:

கடந்த 2012 முதல் 2021ம் ஆண்டு வரை நாட்டில் உருவாக்கப்பட்ட வளங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான அளவு, மக்கள் தொகையில் 1 சதவீதம் பேரிடம் மட்டும் குவிந்துள்ளது.

மொத்த சரக்கு மற்றும் சேவை வரியில் தோராயமாக 64 சதவீதம் நாட்டின் ஏழைகள், கீழ் நடுத்தர மக்கள், நடுத்தர மக்களிடம் இருந்தே வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் விற்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் மற்றும் வளங்களில் பெரும் பகுதி ஒன்று, இரண்டு நிறுவனங்களிடம் சென்று சேர்ந்துள்ளன. அதிகரித்துவரும் ஏகபோகத்தின் காரணமாக நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

70 சதவீத இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பை விட அதிகமாக 21 செல்வந்தர்கள் சொத்துக்களை வைத்துள்ளனர்.

இந்தியாவுக்கு மிக வேகமான பொருளாதார வளர்ச்சி தேவைப்படுகிறது.

இந்தியாவுக்கு விரிவான அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி தேவைப்படுகிறது.

இந்தியாவுக்கு சூழலியல் சார்ந்த மிகப்பெரிய வளர்ச்சி தேவைப்படுகிறது.

இண்டியா கூட்டணியால் மட்டுமே இந்த மூன்றையும் தர முடியும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகப் பேசி வருகிறார். தேர்தல் அறிக்கையில் வளங்களை மக்களிடையே பகிர்ந்து அளிப்போம் என்று கூறியதை குறிப்பிட்டு, நாட்டில் ஊடுருவிய முஸ்லீம்களுக்கு உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள் என பேசி இருந்தார். மேலும், பெண்களின் தங்கத் தாலியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள் என்றும் முஸ்லீம்களை அதிகம் குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த பேச்சு தேசிய அளவில் பெரும் சர்ச்சைக் கிளப்பி உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்