Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

நெல்லை மாநகராட்சியில் என்ன நடக்கிறது??... திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா ஏன்?

LENIN DEVARAJAN23-04-2024
நெல்லை மாநகராட்சியில் என்ன நடக்கிறது??... திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா ஏன்?

நெல்லை 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சின்னத்தாய் கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கடிதம் எழுதியுள்ளார்.

நெல்லை மாநகராட்சி 55 வார்டு உறுப்பினர்களை கொண்டது. கடந்த 2022-ம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது 44 இடங்களில் திமுக வெற்றிப்பெற்றது. மேயராக திமுகவை சேர்ந்த சரவணன் தேர்வு செய்யப்பட்டார்.

நெல்லை மாநகராட்சி கடந்த 2 ஆண்டுகளாகவே பல்வேறு சலசலப்புகளை சந்திக்கிறது. வார்டுகளில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் எடுத்துரைத்தாலும் அதனை சரி செய்வதற்கு மேயர் சரவணன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்கள். இதனால் மேயர் சரவணனை உடனடியாக மேயர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் திமுக கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் திமுக தலைமை தலையிட்டு மேயரையும், கவுன்சிலர்களையும் சமாதானம் செய்தது. இருப்பினும், பிரச்சனைகள் தீரவில்லை.

கடந்த மாதம், நெல்லை மாநகராட்சி 7-வது வார்டு உறுப்பினர் இந்திரா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். அதேபோல், இன்று 36-வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மேயருக்கு கடிதம் எழுதியிருப்பது நெல்லை மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் சரவணனுக்கு, சின்னத்தாய் கிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

”திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பெண் மாமன்ற உறுப்பினராக என்னை தேர்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அதற்கு பரிந்துரை செய்த பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப் அவர்களுக்கும் முதலில் எனது நன்றி.

  1. எனது வார்டு பகுதியான கோரிப்பள்ளம், பெரியார் நகர் ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்கு பாளை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சரோஜினி நீர்தேக்க தொட்டியின் மூலம் பல ஆண்டுகளாக ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்த நடைமுறையை மாநகராட்சி அதிகாரி உயர் ஜாதி மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து என்னை பழிவாங்கும் நோக்கில் அந்த நடைமுறையை மாற்றி அமைத்ததன் முதல் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை மாநகராட்சி உயர் அதிகாரி முதல் நமது திராவிட கழக சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணை மேயர், என அனைவரிடத்திலும் எடுத்து கூறி அதை நிவர்த்தி செய்யவில்லை. இந்த விசயத்தில் ஜாதி பார்தது முடிவு எடுத்துள்ளார்கள். இது என் மனதை ஆரம்ப முதலே பாதித்து வந்தது. மேலும் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகத்தை ”விராஜ்” என்ற தனியார் நபரிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட நாள் முதல் நமது தமிழக முதல்வருக்கும், அவரின் நல்லாட்சிக்கும் அவசொல் ஏற்படுகிற விதமாக குடிநீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடைந்து வருகிறது.

வார்டு தொடர்பாக எந்த ஒரு பணியையும் அதிகாரிகளிடம் எடுத்து கூறினாலும் ஜாதி அடிப்படையில் அதனை கண்டு கொள்வதில்லை. அண்ணாநகர் பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வரும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நிரந்தர தீர்வு இல்லை. குடிதண்ணீர் வழங்குதல், சுகாதார துாய்மை பணி, மின் விளக்கு பணி, மின்சாரதுறை பணி வார்டு கட்டுமான பணி என அனைத்தும் எங்கள் வார்டில் முடங்கி உள்ளது. மேலும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினரான எனக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் அனைவரிடத்திலும், ஜாதி தலைவிரித்து ஆடுகிறது. இவர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய முடியவில்லை. தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் எனது வார்டில் பிரச்சாரம் முதல் பல்வேறு நிலையில் நான் அவமானம் பட்டேன் என்பதை மிகுந்த மன வேதனையுடன் கூறிக் கொள்வதோடு இந்நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் எனது 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவியை இன்று முதல் நான் ராஜினாமா செய்கிறேன் என்பதை மன வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். என்னை தேர்ந்தெடுத்த வார்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு சின்னத்தாய் கிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்