Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

"நாட்டுக்காக மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் எனது தாயார்" ; 'நகை பறிப்பு' பேச்சுக்கு பிரியங்கா பதிலடி

CHENDUR PANDIAN.K24-04-2024
"நாட்டுக்காக மாங்கல்யத்தை தியாகம் செய்தவர் எனது தாயார்" ; 'நகை பறிப்பு' பேச்சுக்கு பிரியங்கா பதிலடி

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களின் " நகை பறிப்பு"குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, இந்த நாட்டுக்காக தனது தாயார் மாங்கல்யத்தை இழந்தார் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்க தவறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

"ஒரு காலத்தில் தலைவர்கள் மேலானவர்களாக காணப்பட்டார்கள். ஆனால், இன்றைக்கு நமது நாட்டின் மிகப்பெரிய தலைவர் (பிரதமர் மோடி) அறநெறியைக் காற்றில் பறக்கவிட்டு, மக்கள் முன்பாக நாடகமாடிக் கொண்டிருக்கிறார். மேலும், அவர் உண்மையின் பாதையில் நடக்கத் தவறிவிட்டார்.

அகந்தையில்...

முன்பெல்லாம் நமது தலைவர்களிடம் நற்குணங்கள் இருந்தன, மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை இருந்தது. ஆனால், தற்போது நமது நாட்டின் மிகப்பெரிய தலைவர் அகந்தையில் திளைத்திருக்கிறார்.

உண்மையின் வழியில் நடக்க வேண்டும் என்ற நமது ஹிந்து பாரம்பரியம், அரசியல் பாரம்பரியமாக இருந்தது. பிறருக்கு சேவை செய்யும் நோக்குடன் நாட்டுக்குச் சேவையாற்றினர். கட்சிப் பாகுபாடு இல்லாமல், நமது நாட்டை ஆண்ட எல்லா பிரதமர்களும் மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றினர்.

ஆனால், இன்றைக்கு பிரதமர் மோடியின் அரசில் பொய்கள் நிரம்பி வழிகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சட்டவிரோதச் செயல்களின் மூலம் கவிழ்க்கும்போது, அதை ஊடகங்கள் மோடியின் அதிரடி தாக்குதல் என்று வர்ணிக்கின்றன. பாஜகவின் இந்த செயலைக் கண்டிக்க யாரும் முன்வருவதில்லை.

மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்காக ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் பாஜக சீரழித்துள்ளது" என்றார்.

மாங்கல்ய தியாகம்

நாட்டு மக்களின் சொத்துகளைப் பறித்து, முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து, பிரியங்கா பேசுகையில் கூறியதாவது:-

'நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய பணம், பெண்களின் "மாங்கல்யம்' மற்றும் தங்க நகைகளைப் பறிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இது தரம்தாழ்ந்த கருத்து.

நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. எப்போதாவது பெண்களின்"மாங்கல்யத்தையோ', நகைகளையோ காங்கிரஸ் பறித்ததா?

போர் காலகட்டத்தில், எனது பாட்டி இந்திரா காந்தி, தனது தங்க நகைகளை நாட்டுக்கு நன்கொடையாக அளித்தார். எனது தாயாரோ, நாட்டுக்காக தனது "மாங்கல்யத்தையே' தியாகம் செய்தார்.

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் அனுபவித்த கஷ்டங்கள் அக்கட்சியினருக்கு தெரியவில்லை. இப்போது தேர்தல் நேரத்தில், பெண்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற நினைக்கின்றனர். இது வெட்கக் கேடானது" என்றார். 

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்