Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

பிரதமர் மோடியின் கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; பணத்தை மீட்டு, மக்களுக்கு பகிர்ந்து அளிக்க ராகுல் உறுதி

CHENDUR PANDIAN.K24-04-2024
பிரதமர் மோடியின் கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; பணத்தை மீட்டு, மக்களுக்கு பகிர்ந்து அளிக்க ராகுல் உறுதி

புதுடெல்லி

பிரதமர் மோடியின் கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட16 லட்சம் கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டு, அது நாட்டில் மிச்சம் உள்ள 90 சதவீத மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. அடுத்த கட்ட தேர்தல்களுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

மோடியின் சர்ச்சை பேச்சுகள்

முதல் கட்ட தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் சர்ச்சை பேச்சுகள் புருவத்தை உயர்த்த வைக்கின்றன. பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்தும் பெண்கள் அணியும் தாலி குறித்தும் அவதூறாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான பதிலடி தாக்குதலை தொடுத்து இருக்கிறார்.

நீண்ட பட்டியல்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியின் குற்றங்களை பட்டியலிட்டு, இந்த குற்றங்களுக்காக நாடு ஒருபோதும் அவரை மன்னிக்காது என்றும் பதிவு செய்து இருக்கிறார்.

"பிரதமர் நரேந்திர மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் கடன் தொகையான ரூ. 16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்திருக்கிறார். இந்த பணத்தில் என்னவெல்லாம் செய்து இருக்கலாம் என நீண்ட பட்டியல் ஒன்றையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அதன் விவரம்:-

  • 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை கொடுத்திருக்கலாம்.

  • 16 கோடி பணிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அவர்களின் குடும்ப வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி இருக்கலாம்.

  • 10 கோடி விவசாய குடும்பங்களின் கடனை தள்ளுபடி செய்திருந்தால் ஏராளமான விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.

  • 200 ஆண்டுகளுக்கு 400 ரூபாய்க்கு நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வழங்கி இருக்கலாம்.

  • 3 ஆண்டுகளுக்கான இந்திய ராணுவத்தின் முழு செலவையும் ஏற்று இருக்கலாம்.

  • மோடி தள்ளுபடி செய்த 16 லட்சம் கோடி ரூபாயில் தலித் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞருக்கும் பட்டப்படிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்கி இருக்கலாம்.

  • இந்தியர்களின் வேதனையை குணப்படுத்த இந்த பெரிய தொகையை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் 'அதானி'களை மேம்படுத்தவே இத்தனை தொகை செலவிடப்பட்டிருக்கிறது.

நாடு ஒருபோதும் மன்னிக்காது

  • பிரதமர் நரேந்திர மோடியின் இந்த குற்றத்தை குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது.

  • தற்போது உள்ள நிலைமை மாறும். ஒவ்வொரு இந்தியரின் முன்னேற்றத்திற்காகவும் காங்கிரஸ் ஆட்சி நடத்தும்" என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.

மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்

மக்களின் செல்வத்தையெல்லாம் பறித்து, ஊடுருவல்காரர்களுக்கு, சிறுபான்மையினர் என்று கூறி காங்கிரஸ் பகிர்ந்துகொடுத்துவிடும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்ததற்கு பதிலடியாக ராகுல் காந்தியின் இந்த பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

நாட்டில் உள்ள தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடி கடன் பணத்தை தொழிலதிபர்களிடமிருந்து மீட்டு அதனை நாட்டில் உள்ள 90 சதவீத மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன் என்றும் இதனை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் உறுதி செய்து இருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்