Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக் - அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்

VASUKI RAVICHANDHRAN24-04-2024
மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக் - அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்

மாணவர்களை குறிவைத்து, ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் என்.சி.பி.அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை துபாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தியது என்.சி.பி. விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கில் முஜிபூர், முகேஷ், அசோக் குமார் மற்றும் ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி சதானந்தம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈட்டிய வருமானத்தை திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் அரசியல் கட்சிக்கு நிதி வழங்கியதாக என்.சி.பி. விசாரணையில் தெரிய வந்தது. அதேபோல், ஜாபர் சாதிக் உடன் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறையினர் யார் யாரெல்லாம் நெருங்கிய தொடர்பில் இருந்தார்களோ விரைவில் விசாரணை வளையத்திற்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் அமீர் விசாரணைக்கு நேரில் ஆஜராக என்.சி.பி. சம்மன் அனுப்பியது. அவரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தியதில் ஜாபர் சாதிக்கின் தொழில் மற்றும் பணப்பரிவர்த்தனை குறித்து என்.சி.பி அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியானது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் ஈடுபட்டிருக்கலாம் என அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. இதுவரை ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்களை அமலாக்கத்துறை நேற்று வெளியிட்டது. அதில், போதைப்பொருள் கடத்தல் மூலம் 40 கோடி ரூபாயை ரியல் எஸ்டேட், மருத்துவமனை மற்றும் திரைத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் மூலம் ஈட்டிய வருமானத்தில் ஜாபர் சாதிக் பல அசையா சொத்துகள் வாங்கியுள்ளதாகவும், ரூ.6 கோடி நேரடியாகவும், ரூ.12 கோடி மறைமுகமாகவும் திரைத்துறையில் முதலீடு செய்துள்ளதாகவும் சமீபத்தில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் திரைப்பட இயக்குனர் அமீர், புஹாரி ஓட்டல் அதிபர் இர்பான் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதில், 40 கோடி ரூபாய் வரை சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்களை கைப்பற்றினர்.

ஜாபர் சாதிக் வீட்டில், மேலும் சில ஆவணங்கள் சிக்கின. அவற்றை ஆய்வு செய்தபோது, பல்வேறு மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு ஜாபர் சாதிக், லட்சக்கணக்கில் பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள், சென்னையில் தங்கி படிக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை குறிவைத்து, போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு புரோக்கர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சங்கங்களின் நிர்வாகிகள் செயல்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன' என்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்