Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல் தொடங்கியது; 88 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்கு பதிவு

CHENDUR PANDIAN.K26-04-2024
நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல் தொடங்கியது; 88 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்கு பதிவு

மக்களவைத் தோ்தலில் இரண்டாம் கட்டமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் 88 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமாா் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளில் இன்று காலை 7:00 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதுதவிர, ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அஸ்ஸாம், பிகாரில் தலா 5, சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் தலா 3, மணிப்பூா், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

வேட்பாளர் மரணம்

இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளா் மரணமடைந்தாா். இத்தொகுதிக்கான தோ்தல் மூன்றாம் கட்டத்துக்கு (மே 7) ஒத்தி வைக்கப்பட்டதால், 88 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பு

காலையிலிருந்தே 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணி அளவில் சராசரியாக 9.3 சதவீத வாக்குகள் இந்த தொகுதிகளில் பதிவாகி இருந்தன.

சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூரில் வாக்குப்பதிவு 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக குறைந்த அளவில் அதாவது ஏழு சதவீத வாக்குகளை பதிவாகி இருந்தன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதிகளில் காலை 9 மணி வரை 10% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

காலை 9:30 மணி நிலவரப்படி கர்நாடகத்தில் 9.21 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தட்சிண கன்னடத்தில் அதிகபட்சமாக 14 சதவீத வாக்குகளும் பெங்களூர் தெற்கு தொகுதியில் ஒன்பது சதவீத வாக்களும் பெங்களூர் வடக்கு மத்திய மற்றும் ரூரல் தொகுதிகளில் எட்டு சதவீத வாக்குகளும் பதிவாயிருந்தன.

கடந்த தேர்தலின் போது இந்த 89 தொகுதிகளில் 56 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஒரு போக்கு கூட்டணிக்கு 24 தொகுதிகளும் கிடைத்திருந்தன.

சிறிய அளவிலான ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிர மொத்தத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது.

இத்தொகுதிகளில் மொத்தம் 15.88 கோடி வாக்காளா்கள் (ஆண்கள் 8.08 கோடி, பெண்கள் 7.8 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 5,929 போ்) உள்ளனா். முதல் முறை வாக்காளா்கள் 34.8 லட்சம் போ். 20 முதல் 29 வயது வரையுள்ள வாக்காளா்கள் 3.28 கோடி போ்.

முக்கிய வேட்பாளா்கள்

களத்திலுள்ள மொத்த வேட்பாளா்கள் 1,202 போ். பெண் வேட்பாளா்கள் 102 போ். மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த இரு வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

மத்திய அமைச்சா்கள் ராஜீவ் சந்திரசேகா் (திருவனந்தபுரம்), கஜேந்திர சிங் ஷெகாவத் (ஜோத்பூா்), மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா (கோட்டா), காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (வயநாடு), கட்சியின் மூத்த தலைவா்கள் கே.சி.வேணுகோபால் (ஆலப்புழை), சசி தரூா் (திருவனந்தபுரம்), பாஜக இளைஞரணி தேசியத் தலைவா் தேஜஸ்வி சூா்யா (பெங்களூரு தெற்கு), சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் (ராஜ்நந்த்கான்), நடிகை ஹேமமாலினி (மதுரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

கேரளத்தில் கடந்த 2019 தோ்தலில் ஆலப்புழை தவிர இதர 19 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. ஆலப்புழையில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஏ.எம்.ஆரிஃப் வெற்றி பெற்றிருந்தாா்.

ராகுல் காந்தி

இம்முறை இத்தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் களமிறக்கப்பட்டுள்ளாா். இவா், இதுவரை போட்டியிட்ட முக்கியத் தோ்தல்கள் அனைத்திலும் வெற்றி கண்டவா். மாா்க்சிஸ்ட் சாா்பில் தற்போதைய எம்.பி. ஏ.எம்.ஆரிஃப் களத்திலுள்ள நிலையில், இத்தொகுதியில் வெல்வதை காங்கிரஸ் கெளரவப் பிரச்னையாக கருதுகிறது.

இதேபோல், வயநாட்டில் ராகுலுடன் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆனி ராஜா மோதுகிறாா். இந்த மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2.77 கோடியாகும்.

மக்களவைக்கான மூன்றாம் கட்ட தோ்தல் மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 1 வரை அடுத்தகட்ட வாக்குப் பதிவுகள் நடத்தப்படவுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்ட தோ்தல் ஒரு கண்ணோட்டம்

மொத்த தொகுதிகள் 88

வாக்காளா்கள் 15.88 கோடி

வேட்பாளா்கள் 1,202

வாக்குப் பதிவு மையங்கள் 1.67 லட்சம்

தோ்தல் பணியாளா்கள் 16 லட்சம்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்