Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

காங்., மீது தொடர்ந்து ‘முஸ்லீம் அரசியல்‘ குற்றம்சாட்டும் பாஜக; மன்மோகன் சிங் பேசும் வீடியோவை வெளியிட்டது

PRIYA26-04-2024
காங்., மீது தொடர்ந்து ‘முஸ்லீம் அரசியல்‘ குற்றம்சாட்டும் பாஜக; மன்மோகன் சிங் பேசும் வீடியோவை வெளியிட்டது

காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை சமாதானப்படுத்தும் அரசியல் செய்து வருவதாகவும் அதற்காக பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகளை பறிக்கும் ரகசியத் திட்டத்தோடு காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையும் மீறி பாஜக இதனைச் செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. அதில், சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த வாக்குறுதியை சுட்டிக்காட்டி, மக்களிடம் இருக்கும் சொத்துக்களை பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் அளிக்க இருப்பதாக பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் பேசினார். அதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2006ம் ஆண்டு பேசியதை பாஜக சுட்டிக் காட்டியது. நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை இருக்கிறது என்று பேசியதாக பாஜக தெரிவித்தது.

இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததோடு, மோடி பேசும்போது இஸ்லாமியர்களை ஊடுருவியவர்கள், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் என்று குறிப்பிட்டு இருந்ததை கண்டித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு பாஜக கட்சித் தலைமைக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வேட்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களின் நடத்தைக்கு கட்சித் தலைமைதான் பொறுப்பு என்றும் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் பாஜகவின் தலைவரான ஜே.பி. நட்டா, பேசும் வீடியோவை பாஜக அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது.

அதில் நட்டா கூறியிருப்பதாவது:-

எஸ்.சி., எஸ்டி, ஓபிசி ஆகியோரின் உரிமைகளைப் பறித்து அதனை முஸ்லீம்களுக்கு தருவதே காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியின் ரகசிய திட்டமாகும். நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு தான் முதல் உரிமை உள்ளது என்று காங்கிரஸ் சொல்கிறது. அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளங்களில் முதல் உரிமை ஏழை மக்களுக்கு தான் உள்ளது எனக் கூறுகிறார்.

மன்மோகன் சிங் தெரியாமல் அது போல் பேசவில்லை. அதை வேண்டும் என்றே தான் பேசி இருக்கிறார். 2009ம் ஆண்டு மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து பதில் அளித்தார். அவர் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லீம்களுக்கு நாட்டின் வளங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; முதல் உரிமை அவர்களுக்கானதாகத் தான் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சச்சார் கமிட்டியின் அறிக்கை மூலமாக, தலித்துகளை விட முஸ்லீம்கள் மோசமான நிலையில் இருப்பது போல் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டன. காங்கிரஸ் கட்சி, ‘முஸ்லீம் எஸ்சி’ என பிரிவை அறிவித்து எஸ்சி இடஒதுக்கீட்டு சலுகைகளை அவர்களுக்கு அளிக்க அடித்தளம் போட்டு விட்டது. எஸ்.சி., எஸ்டி மற்றும் ஓபிசியினரை காங்கிரஸ் வெறுக்கிறது. ஏனெனில் அவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர். இது தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை.

இவ்வாறு நட்டா குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மன்மோகன் சிங், பேசும் விடியோவையும் பாஜக பகிர்ந்துள்ளது. 32 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் அவர், முஸ்லீம்கள் பற்றி பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், நான் ‘மைனாரிட்டி‘ என்ற வார்த்தையை முஸ்லீம்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினரைக் குறிக்கும் வகையில் தான் பயன்படுத்தினேன் என்றும் முஸ்லீம்களில் ஏழைகள் இருந்தால் அவர்களுக்கு நாட்டின் வளங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதையும் உறுதியாக மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்