Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மக்களவை தேர்தல்: வேட்புமனுவை திரும்பப்பெற்ற இந்தூர் காங். வேட்பாளர்; பாஜகவில் இணைந்தார்

PRIYA29-04-2024
மக்களவை தேர்தல்: வேட்புமனுவை திரும்பப்பெற்ற இந்தூர் காங். வேட்பாளர்; பாஜகவில் இணைந்தார்

மத்திய பிரதேசம் இந்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் அக்ஷய் கன்டி பம், தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றதுடன் பாஜகவில் இணைந்தார். இது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் தற்போதைய எம்பி சங்கர் லவானிக்கு எதிராக இவர் களம் இறக்கப்பட்டார்.

அக்ஷய் கன்டி வேட்புமனுவை திரும்பப் பெற்றதை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆஷிஷ் சிங் உறுதி செய்துள்ளார்.

இதற்கிடையே மத்திய பிரதேச அமைச்சரும் பாஜக தலைவருமான கைலாஷ் விஜய்வர்கியா, தனது எக்ஸ் தளத்தில் அக்ஷய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, வரவேற்று பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் மாநிலத் தலைவர் வி.டி. சர்மா ஆகியோரின் தலைமையிலான பாஜகவுக்கு காங்கிரஸ் மக்களவைத் தேர்தல் இந்தூர் வேட்பாளர் அக்ஷய் கன்டி பம்மை வரவேற்கிறேன்.”, எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும், விதிஷா தொகுதி பாஜக வேட்பாளருமான சிவ்ராஜ் சிங் சவுகான், பழமையான காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் கூட இருக்க விரும்புவதில்லை என கிண்டல் செய்துள்ளார்.

இந்தூர் தொகுதிக்கு மே 13ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளரின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனுவும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன. பிற வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கும்பானியை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் நீக்கியது. இவரின் அலட்சியம் அல்லது பாஜகவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக முடிவு செய்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தூர் வேட்பாளரின் இந்த செயலும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்