Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

NOTA: நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும் தொகுதிக்கு மறுதேர்தல் கோரி மனு: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

PRITHIVIRAJ26-04-2024
NOTA: நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும் தொகுதிக்கு மறுதேர்தல் கோரி மனு: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் பதிவாகும் தொகுதியில் மறு தேர்தல் நடத்தக் கோரி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை ஏற்று தேர்தல் ஆணையம் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியில் அரசியல் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கையில்லாத சூழலை வாக்காளர்கள் உணர்ந்தால், எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால், வாக்கு எந்திரத்தில் வழங்கப்பட்டுள்ள நோட்டா என்ற பொத்தானை அழுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையம் கடந்த 2013ம் ஆண்டு இந்த நோட்டா முறையைக் கொண்டுவந்தது.

images (81).jpeg

தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள இந்த முறை என்பது, வாக்காளர்களை ஆர்வத்துடன் வாக்களிக்க வரச் செய்ய வேண்டும், வாக்குச்சாவடிக்கு வந்து எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காவிட்டாலும்கூட, நோட்டாவுக்காவது வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வந்தது. இந்த முறையால், வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பதால் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தால், அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படு வேண்டும் எனக கோரி எழுத்தாளர் ஷிவ் கேரா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் சங்கர நாராயணன் ஷிவ் கேரா சார்பில் ஆஜராகி மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் “ குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு எதிராக எந்த வேட்பாளரும் இல்லாததால் அவர் எதிர்ப்பின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வேறு யாருக்கும் எந்த வாக்கும் கிடைக்காமல் அனைத்து வாக்குகளும் பாஜக வேட்பாளருக்கே கிடைத்தன.

1616066711_supreme-court-4.avif

ஆதலால், நோட்டாவை நிரந்தரமான வேட்பாளராக தேர்தல் ஆணையம் அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தால் அந்தத் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என அறிவித்து மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை இருமுறை அணுகி, நோட்டாவை நிரந்தர வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனக் கோரினோம்.

மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, புதுச்சேரி ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்களில் நோட்டாவை கற்பனையான வேட்பாளராக உள்ளாட்சித் தேர்தலில் அறிவித்தன. இந்த மாநிலங்களில் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, எந்த தேர்தலிலாவது போட்டியிடும் வேட்பாளர்கள் நோட்டாவைவிட குறைந்த வாக்குகள் பெற்றால், எந்த வேட்பாளரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படமாட்டார்கள், கண்டிப்பாக மறுதேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் விதிகளை வகுக்க வேண்டும். நோட்டாவுக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்தால், அந்த தொகுதியில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என அறிவித்து, புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கற்பனையான வேட்பாளர் நோட்டா என்று போதுமான விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் பெறும் வேட்பாளர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடைவிதிக்க வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

nota1.jpg

இந்த மனு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜேபி பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்குவந்தது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு, “இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டதால், அவர்களின் என்ன கருத்துக் கூறுகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்

ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்ற கெடுவை நீதிபதிகள் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்